திருச்செந்தூர், பிப் 11: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சனிக்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோவிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் தான். இதனால் ஆண்டுதோறும் தை உத்திரநட்சத்திரத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறும்.
இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவிலில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
திருக்கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும், குமரவிடங்கப்பெருமான் சன்னிதியில் ஸ்ரீ சண்முகருக்கும், பெருமாள் கோவில் முன் பெருமாளுக்கும் 5 கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து காலை 8.45 மணிக்கு மூலவர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீ சண்முகர், பெருமாள் ஆகிய சுவாமி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இரவில் மூலவருக்கு பக்தர்கள் வழங்கிய புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் அம்பாளுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவில் திருக்கோவில் உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் அர.சுதர்சன், தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.