சேலம், பிப்.11: சேலத்தில் ஈழத் தமிழர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே நடைபெற்றது. அப்போது இலங்கை துணைத் தூதரிடம் கூட்டத்தில் பங்கேற்ற 2 பேர் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பினர். அவர்களை டவுன் போலீஸார் கைது செய்தனர்.
இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அரங்கினுள் நுழைந்த "தமிழ்நாடு மனித உரிமை இயக்கம்' மாநிலத் தலைவர் பூமொழி ( 39), தோழர்கள் வட்டம் அமைப்பின் நிர்வாகி காமராஜ் (35) ஆகிய 2 பேரும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியிடம், இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இங்கு எதற்கு வந்தீர்கள் என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
இதைச் சற்றும் எதிர்பாராத வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அப்போது போலீஸார் இருவரையும் குண்டுக்கட்டாக வெளியில் தூக்கிச் சென்றனர். இருவரும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருவர் மீதும் அத்துமீறி நுழைதல் (இ.த.ச. 448), அரசு அலு வலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (பிரிவு 353) உள்ளிட்ட 3 பிரிவுகளில் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.