தேமுதிக கொடிநாளில் ஏழைகளுக்கு உதவ வேண்டும்: விஜயகாந்த்
சென்னை, பிப்.11: தேமுதிக கொடிநாளான பிப்ரவரி 12-ம் தேதி, கொடியேற்றி ஏழைகளுக்கு இயன்றதை உதவ வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ""பிப்ரவரி 12-ம் தேதி தேமுதிகவின் கொடிநாளாகும். கட்சி துவங்கியதில் இருந்து கடுமையான சோதனைகளைச் சந்தித்து வருகிறோம். எனினும் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்திருக்கும் நல்லெண்ணமும், நம்பிக்கையும் வளர்ந்த வண்ணம் உள்ளன. அதனாலேயே தேமுதிகவை எதிர்க்கட்சியாக ஆக்கியுள்ளனர். மின்சாரத் தட்டுப்பாட்டால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பஸ் கட்டண உயர்வோ, பால் விலை உயர்வோ குறைந்தபாடில்லை. மின் கட்டண உயர்வோ மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் பிரச்னைகளில் இருந்து ஏழை, நடுத்தர மக்களை மீட்பதே தேமுதிகவின் கடமையாகும்.
கொடிநாளில் கட்சியினர் கொடியேற்றி ஏழைகளுக்கு இயன்றதைச் செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளார்.