சென்னை, பிப். 11: மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் இந்தியத் தொழிலாளர்களை ஓரணியில் திரட்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா தெரிவித்தார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 28-ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் சேர்ந்து கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்துக்கான ஆயத்த மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் பங்கேற்று குருதாஸ் தாஸ்குப்தா பேசியது:
கட்டுப்படுத்தப்படாத விலைவாசி உயர்வு, பறிக்கப்படும் தொழிலாளர்களின் உரிமைகள் போன்ற காரணங்களால் இன்று தொழிலாளர்களின் வாழ்க்கை அவலம் நிறைந்ததாக மாறியுள்ளது.
இந்திய மக்கள் மீதான புதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலைசெய்ய வேண்டிய நெருக்கடிக்கு பல தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அமைப்புசாராத் தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது.
இந்த நிலையில் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. இந்தியத் தொழிலாளர்களின் நிலைமை பற்றி காது கொடுத்துக் கேட்கக் கூட பிரதமர் மன்மோகன் சிங் மறுக்கிறார். மத்தியத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை இதுவரை அவர் சந்தித்துப் பேசியதே இல்லை.
மாறாக, பெரும் முதலாளிகளுக்கு ஏதேனும் நெருக்கடி என்றால் உடனடியாக அவர்களை அழைத்து பிரதமர் பேசுகிறார். அவர்களுக்கு நிதி உதவிகளை அளிக்கிறார்.
இந்த சூழலில் இந்திய நாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில்தான் நாட்டில் உள்ள அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் ஒரே அணியாக சேர்ந்து அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை பிப்ரவரி 28-ம் தேதி நடத்த அழைப்பு விடுத்துள்ளன என்றார் குருதாஸ் தாஸ்குப்தா.
இந்த மாநாட்டில் சி.ஐ.டி.யு. அகில இந்திய துணைத் தலைவர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., தொ.மு.ச. பேரவைத் தலைவர் செ. குப்புசாமி, பி.எம்.எஸ். பொதுச் செயலாளர் பைஜ் நாத் ராய், ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் எஸ்.எஸ். தியாகராஜன், ஐ.என்.டி.யு.சி. மாநிலப் பொதுச் செயலாளர் கா. இளவரி, எச்.எம்.எஸ். சார்பில் க.அ. ராஜா ஸ்ரீதர், ஏ.ஐ.சி.சி.டி.யு.யின் வீ. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.