சென்னை, பிப். 11: தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆதார் அட்டைகள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கிய நிதி தீர்ந்து விட்டதே இதற்குக் காரணம் எனஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய மக்கள் அனைவருக்கும் பிரத்யேக எண்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது.
மத்திய திட்டக் கமிஷனின் கீழ் செயல்படும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் மேற்பார்வையில் ஆதார் அட்டை விநியோகப் பணிகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வந்தது.
இந்திய அஞ்சல்துறை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பிரத்யேக அடையாள அட்டைக்கான ஆணையத்தின் அனுமதி பெற்ற சில தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் ஆதார் அட்டை விநியோகப் பணிகள் நடைபெற்று வந்தன. முதல்கட்டமாக, மாநிலத் தலைநகரங்களில் தொடங்கி, பின்னர் படிப்படியாக மாவட்டங்களுக்கும் ஆதார் அட்டை விநியோகப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை, 23 தலைமை அஞ்சல் அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் இந்த அட்டை வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எங்கு வேண்டுமானாலும் ஆதார் அட்டைக்காக பதிவு செய்துக் கொள்ளலாம் என்பதால் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
உள்துறை அமைச்சகம் சந்தேகம்: இந்த நிலையில், ஆதார் அட்டை வழங்கும் பணியை பிரத்யேக அடையாள அட்டைக்கான ஆணையம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் தனது அச்சத்தை பிரதமர் அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி தெரியப்படுத்தியது.
மேலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலமாகவே ஆதார் அட்டைக்கான பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. இதன் எதிரொலியாக தில்லி, மும்பை ஆகிய மாநிலங்களில் முதல்கட்டமாக இப்பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் அடுத்தப்படியாக தமிழகத்திலும் ஆதார் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி தீர்ந்தது: இதனிடையே, ஆதார் அட்டை வழங்க மத்திய அரசு வழங்கிய நிதி தீர்ந்து விட்டதாலேயே இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, ஆதார் அட்டைக்குப் பதிவு செய்தல் மற்றும் விநியோகத்துக்காக பிரத்யேக அடையாள அட்டைக்காக ஆணையத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு ஒதுக்கீடு செய்யும். இந்த ஆணையத்தின் மூலமாக, இந்தப் பணிகளைச் செய்யும் அஞ்சல்துறை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும்.
ஒவ்வொரு நிறுவனத்துக்கு நிதி ஒதுக்குவதோடு அந்நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிக்காலத்தையும் அந்த ஆணையம் நிர்ணயம் செய்யும். அதன்படி, இந்திய அஞ்சல்துறை, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆதார் அட்டைப் பணிக்காக அரசு கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதி தீர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த ஆண்டுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணிக்கான நிதி ஒதுக்கப்படும் என்றும், இதன் பின்னரே இப்பணி மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிகிறது.
ஏப்ரல் 2-வது வாரத்திலிருந்து... இதனிடையே ஆதார் அட்டை வழங்கும் பணி ஏப்ரல் 2-ம் தேதியிலிருந்து மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக அஞ்சல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2011-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 கோடி ஆதார் அட்டைகளை விநியோகம் செய்ய வேண்டும் என மத்திய அரசின் சார்பாக வாய்மொழி உத்தரவிடப்பட்டது. இதன்படி, அஞ்சல்துறை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, அவைகள் விநியோகம் செய்ய வேண்டிய எண்ணிக்கைக்கேற்ப நிதியும் வழங்கப்பட்டது. இந்த வகையில், இந்திய அஞ்சல்துறையின் சார்பாக இதுவரை நாடு முழுவதும் சுமார் 71 ஆயிரம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஓர் அட்டை வழங்குவதற்கு ரூ. 50 செலவிடப்படுகிறது.
அவ்வாறு பார்த்தால் அஞ்சல்துறையில் பதிவுச் செய்தவர்களுக்காக இதுவரை சுமார் ரூ. 35 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனிடையே, அஞ்சல்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி தீர்ந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இப்பணியை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் தீர்ந்துள்ளது.
இதனால் கடந்த 7-ம் தேதி முதல் ஆதார் அட்டைகள் வழங்கும் பணிகள் அனைத்து இடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. வங்கிகளைப் பொருத்தவரை, கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே இதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்காக மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் ஏப்ரல் 2-ம் வாரத்திலிருந்து ஆதார் அட்டை பதிவு மற்றும் விநியோகப் பணி தொடங்கும் என அவர் தெரிவித்தார்.