கும்பகோணம்,பிப்.11: ஓராண்டுக்கு தமிழகத்தின் ஆட்சியை எங்களிடம் அளித்தால் தமிழகத்தின் கடன்கள் முழுவதையும் அடைத்து வெற்றிப்பாதையில் தமிழகத்தைக் கொண்டு செல்லும் திட்டம் எங்களிடம் உள்ளது என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
தஞ்சை (வடக்கு) மாவட்ட பாமக சார்பில் கும்பகோணம் மகாமகக் குளம் மேல்கரையில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேசியது:
45 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சுரண்டி, தமிழர்களைக் குடிகாரர்களாகவும், சோம்பேறிகளாகவும் மாற்றி விட்டனர். இந்த திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரிசி,டி.வி,மிக்ஸி,ஆடு,மாடு என இலவசமாக வழங்குகிறார்கள். இனி இலவசமாக மது பாட்டில்கள் தான் வழங்கவேண்டும். அதையும் வழங்குவார்கள்.
மாற்றத்தை மற்றவர்களால் கொடுக்க முடியாது. அவர்களால் நாடு கெட்டு போய் விட்டது. வித்தியாசமான மாற்றத்தை பாமக மட்டுமே தர முடியும். பாமக ஒரு வரைவு செயல் திட்டத்தை தயாரித்துள்ளது. அதில் 16 தலைப்புகளில் வேளாண்மை, கல்வி, தொழில் வளர்ச்சி, சமூகநீதி, சுகாதாரம் உள்ளிட்டவைகளில் வளர்ச்சியடைய பாடுபடுவோம். பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசப் பொருள்கள் கிடையாது. மாறாக அனைவருக்கும் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு அனைத்து இடுபொருட்கள் இவை தான் இலவசமாக வழங்கப்படும்.
தமிழக மக்களின் முன்னேற்றத்தை பாமக மட்டுமே கொண்டு வரும். எனவே பாமகவிற்கு தமிழகத்தில் ஒரு வாய்ப்புத் தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும். யாரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இல்லை என்ற நிலைûயை ஏற்படுத்துவோம்.
மின்வெட்டு பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆட்சிக்கு வந்ததும் 2012-ல் என்றார். இப்போது அடுத்த ஆண்டு தீரும் என்கிறார். திராவிடக் கட்சிகளிடம் நிர்வாக திறன் இல்லை.
நாடு முழுவதும் நாங்கள் சுகாதாரத்துறையில் பல திட்டங்களை கொண்டு வந்தோம். மத்திய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் எனக்கு உலக அளவிலான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தியாவிற்கே நல்ல திட்டங்களை கொடுத்த நாம் தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொடுக்கமுடியாதா.
தமிழகத்தின் கடன் திமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 2ஆயிரம் கோடி. தற்போது அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 19ஆயிரம் கோடி. இதில் 60சதம் கடன் இலவசத்தால் ஏற்பட்டது. எனவே ஓராண்டுக்கு ஆண்டு ஆட்சியை பாமகவிடம் கொடுத்தால் இந்த கடன்களை அடைக்க நம்மிடம் திட்டம் உள்ளது. எனவே ஒரு முறை பா.ம.கவிற்கு மக்கள் வாய்ப்பளிக்கவேண்டும் என்றார்.