சென்னை, பிப்.11: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அதிமுக சார்பில் 5 நாள்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்தப் பொதுக்கூட்டங்களில் அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசுகின்றனர். இது தொடர்பாக அதிமுக கொள்கை பரப்புச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை:
""முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24-ம் தேதியாகும். இந்த நாளையொட்டி, பிப்ரவரி 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 5 நாள்களுக்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புதுதில்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வில்லிவாக்கத்திலும், வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆர்.கே.நகரிலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் வேலூரிலும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தாம்பரத்திலும், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா அண்ணாநகரிலும், பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசுகின்றனர்'' என்று அவர் கூறியுள்ளார்.