திருவெறும்பூர், பிப். 11: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே லாரியை ஏற்றி பேருந்து ஓட்டுநரைக் கொலை செய்ததாக லாரி ஓட்டுநரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர் ஆ. சுந்தர்ராஜ் (44). தனியார் பேருந்து ஓட்டுநரான இவர், சனிக்கிழமை காலை துவாக்குடி அருகே திருநெடுங்குளம் செல்லும் தனியார் பேருந்தை ஓட்டி வந்தார்.
அப்போது பழையப் பால் பண்ணையிலிருந்து வந்த ஓரு லாரி இந்தப் பேருந்து மீது மோதுவது போல வந்து கொண்டிருந்ததாம். இதையடுத்து, பேருந்தை காட்டூர் பேருந்து நிறுத்துமிடம் அருகே நிறுத்திய சுந்தர்ராஜ், லாரியை மறித்து, அதன் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜ் மீது லாரியை ஏற்றிக் கொலை செய்து விட்டு, லாரியை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த திருவெறும்பூர் போலீஸார் அந்த லாரியை துவாக்குடி அருகே சுங்கச்சாவடியில் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் பிடிபட்ட லாரி ஓட்டுநர் கும்பகோணம், தாரசுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்ஹமீது மகன் முகமதுகாசீம் (29) எனத் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.