தருமபுரி, பிப். 11: வீரதீர செயல் விருது பெற்ற தருமபுரி மாவட்ட மாணவர் ஜி. பரமேஸ்வரனுக்கு, தமிழக அரசு சார்பில் 46 சென்ட் விளைநிலம் இலவசமாக வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அக்காசனஹள்ளியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (14), கடந்தாண்டு அக்டோபர் மாதம் நாகாவதி அணை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுமிகளை உயிருடன் மீட்டதற்காக மத்திய அரசின் வீரதீர செயல் விருது பெற்றுள்ளார்.
மாணவனின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. இவரது தந்தை கோவிந்தன், கட்டட பணிகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளியாக உள்ளார்.
பெரும்பாலான நாள்கள் குடும்பத்தை பிரிந்து பல்வேறு ஊர்களிலேயே தங்கியிருப்பார். எனவே, மாணவனின் தாயார் லட்சுமி, கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.
மாணவனுக்கு 3 சகோதரிகள், 2 சகோதரர்கள் உள்ளனர். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதே பரமேஸ்வரனின் ஆசை. இந்தச் சூழலில், மாணவனின் குடும்பம் வறுமையில் இருப்பதை உணர்ந்தும், 3 சிறுமிகளைக் காப்பாற்றியதற்குப் பாராட்டி, ஊக்குவிக்கும் வகையிலும் 46 சென்ட் நிலம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்படி, இந்த நிலத்துக்கான பட்டாவை மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன், சனிக்கிழமை ஒப்படைத்தார். இந்த நிலத்தில் விவசாயம் செய்து கொள்ளவும், வீடு கட்டுவதற்கு பசுமை வீடுகள் திட்டத்தில் உதவி செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலத்தை விற்கவோ, யாருக்கேனும் மாற்றம் செய்து பட்டா வழங்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு எம்எல்ஏ கே.பி. அன்பழகன் உடனிருந்தார்.