Enable Javscript for better performance
காற்றழுத்தத் தாழ்வு நீடிப்பு: வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும்- Dinamani

சுடச்சுட

    

    காற்றழுத்தத் தாழ்வு நீடிப்பு: வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும்

    By dn  |   Published on : 04th December 2012 03:05 AM  |   அ+அ அ-   |    |  

    map

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று வலுவிழந்து தென் ஆந்திரம் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

    இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. செவ்வாய்க்கிழமையும் (டிசம்பர் 4) கனமழை தொடரும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையோ அல்லது மிக கன மழையோ பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. திங்கள்கிழமை அது காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்தது. இருப்பினும் தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டிருப்பதால் அடுத்த சில நாள்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை போதிய அளவு பெய்யாததால் மாநிலத்தின் முக்கிய அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.  இதனால் காற்றழுத்தத் தாழ்வு நிலை அல்லது வெப்பசலனத்தின் காரணமாக பெய்யும் மழையை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் 4 நாள்களுக்காவது தொடர்மழை பெய்தால்தான் ஏரிகளின் நீர்மட்டம் உயரும். தொடர் கனமழை பெய்தால் மட்டுமே சென்னையில் சில மாதங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடாது' என்றனர்.

    தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியது:

    காற்றழுத்தத் தாழ்வு நிலை தென் ஆந்திரம் மற்றும் தமிழக கடலோரத்தில் நிலை கொண்டிருப்பதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றார்.

    திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

    சென்னை - 50; காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் - 40; ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் - 30; எண்ணூர், விழுப்புரம் மாவட்டம் வானூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, செய்யாறு - 20.

    kattana sevai