சுடச்சுட

  

  பிஆர்பி நிறுவனம் சட்ட விரோதமாக வெட்டி எடுத்த கிரானைட் கற்களின் மதிப்பு ரூ.620 கோடி

  By dn  |   Published on : 06th December 2012 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் சட்டவிரோதமாக அரசு நிலத்தில், ரூ.620 கோடிக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.

  பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்குச் சொந்தமான தெற்குத்தெரு கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றுமாறும், கனிமவளத் திருட்டு தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவும் தனி நீதிபதி வினோத்குமார் கே. சர்மா உத்தரவிட்டார்.

  இந்த உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். பாஷா, டி.தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்து, தற்போதைய நிலையைத் தொடர உத்தரவிட்டது.

  இந்நிலையில் இதுகுறித்த வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

  அப்போது பி.ஆர்.பி. தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராமகிருஷ்ணரெட்டி வாதிடுகையில், தற்போதைய சூழ்நிலையில் அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை எங்களால் யூகிக்கக்கூட முடியவில்லை. குவாரி பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உங்கள் தரப்பு மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததும் அவர்களாகவே தலைமறைவாகி விட்டனர் என அரசு தரப்பு கூறுகிறது. அவர்கள் வழக்குகளை எதிகொள்ள வேண்டியதுதானே என்றனர்.

  அரசு தலைமை வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் வாதிடுகையில், பி.ஆர்.பி. நிறுவனம் ஒரு குவாரியில் மட்டும் ரூ.620 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துள்ளனர் எனத் தெரிவித்து அதன் விவரத்தை நீதிபதிகளிடம் அளித்தார்.

  இதனை ஆட்சேபித்து, நாங்கள் தலைமறைவாகி ஓடவில்லை. போலீஸார் அளிக்கும் தொந்தரவுதான் காரணம். எங்களை குவாரி பணிகளைச் செய்ய அனுமதிக்கவேண்டும் என்றார் ராமகிருஷ்ணரெட்டி.

  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சீலை அகற்ற உத்தரவிட்டுள்ள தனி நீதிபதி, முறைகேடுகள் மீதான நடவடிக்கைகளைத் தொடரவும் அனுமதி அளித்துள்ளார். மேலும், இவ்வழக்கில் பிரத்யேகமான சூழ்நிலை உள்ளது. உரிமையியல் வழக்குகளும் குற்றவியல் வழக்குகளும் கலந்துள்ளன எனக் குறிப்பிட்டனர்.

  இதற்கு விளக்கம் அளித்த ராமகிருஷ்ணரெட்டி, கிரானைட் பிரச்னையில் குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்தாது. கனிமவளச் சட்டத்தின் கீழ் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.

  இதையடுத்து சட்டவிரோதமாக கிரானைட் வெட்டியதன் மதிப்பீடு முடிந்தாலே, முழு விவரம் தாக்கல் செய்யமுடியும். எனவே 2 வாரம் அவகாசம் வேண்டும் என தலைமை வழக்குரைஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai