மார்க்சியம் கற்றவர்கள் அனைத்தும் கற்றவர்கள்: பழ. கருப்பையா

சென்னை, ஜன. 4: மார்க்ஸியத்தை ஆழ்ந்து கற்றவர்கள் அனைத்தையும் கற்றவர்கள் என எழுத்தாளரும், அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா கூறினார்.  'காவல் கோட்டம்' நூலுக்காக சாகித்ய அகாதெமி விரு
மார்க்சியம் கற்றவர்கள் அனைத்தும் கற்றவர்கள்: பழ. கருப்பையா

சென்னை, ஜன. 4: மார்க்ஸியத்தை ஆழ்ந்து கற்றவர்கள் அனைத்தையும் கற்றவர்கள் என எழுத்தாளரும், அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா கூறினார்.

 'காவல் கோட்டம்' நூலுக்காக சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள எழுத்தாளர் சு. வெங்கடேசனுக்கு சென்னையில் புதன்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பழ. கருப்பையா பேசியது:

 'காவல் கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததைக் காட்டிலும், வசந்த பாலன் போன்றவர்கள் திரைப்படத்துக்கான கதையை இந்த நாவலிலிருந்து தேர்வு செய்திருப்பதுதான் படைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.

 திராவிட இயக்கத்தினருக்கு மட்டும்தான் தமிழ் உரியது என்ற நிலையை சு. வெங்கடேசன் மாற்றிருக்கிறார். ஏனெனில் மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர்கள், அனைத்தையும் கற்றவர்கள் என்றார் பழ. கருப்பையா.

 ராஜேந்திர சோழன்: சாகித்ய அகாதெமி விருது என்பது ஒரு வசீகரமிக்க இளம் பெண் போன்றது. இந்த இளம் பெண் தகுதியில்லாதவர்களுடன் செல்லும்போது சிறிய வருத்தம் ஏற்படும். நமது பக்கத்தில் வரும்போது ஒரு வேகம், பரவசம், மகிழ்ச்சி ஏற்படும்.

 ஏனென்றால், ஒவ்வொரு முறை இந்த விருது வழங்குகின்றபோதும் பெரிய சர்ச்சை ஏற்படுவது வழக்கம். கடந்த முறை எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்ட போதும், இப்போது சு. வெங்கடேசன் பெற்றுள்ளபோதும் பெரிய சர்ச்சைகள் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து தனது 38-வது வயதில் முதல் நூலாக வெளியிட்டு, 41-வது வயதில் அதற்காக சகித்ய அகாதெமி விருதுக்கு சு. வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தமிழ்ச் சூழலிலே மதுரை மாநகரை மையப்படுத்தி அந்தக் கால மக்களின் 600 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை நவீனமாக்கியிருக்கிறது இந்த நூல் என்றார் ராஜேந்திர சோழன்.

 தமிழ்ச்செல்வன்: வரலாறு என்பதே சார்புடையதுதான். கல்கி, சாண்டீபன் உள்ளிட்ட சரித்திர நாவல்கள், ஏற்கெனவே எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சரித்திரத்தை கதையாக்கின.

 ஆனால், "காவல் கோட்டம்ட எழுதப்படாத வரலாற்றை, சொல்லப்பட்ட வரலாற்றின் சில குறியீடுகள் வழியாக சொல்கிறது. அந்தக் கால மதுரைப் பெண்களின் வீரம், ஆதித் தாயை நினைவுபடுத்தும் வகையிலும், கோட்டைகள் இடிக்கப்பட்டு மதுரை எப்படி விரிவுபடுத்தப்பட்டது என்பது குறித்தும் புதிய வரலாற்றுச் செய்தியை இந்த நாவல் தந்திருக்கிறது.

 சு. வேணுகோபால்: "காவல் கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது குறித்து சிறு சர்ச்சை எழுந்துள்ளது. படைப்பாளியைவிட, அவர் படைத்துள்ள படைப்பையும், அவருடைய 10 ஆண்டு கால உழைப்பையும்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபோன்று சர்ச்சைகளை எழுப்புவர்கள், தாங்கள் கூறும் நூலுடன் இந்த நாவலை ஒப்பிட்டு ஆரோக்கியமான விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். அவ்வாறு விவாதத்துக்கு வருபவர் வெற்றி பெற்றுவிட்டால், இந்த விருது மூலம் சு. வெங்கடேசனுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் உடனடியாக அவரிடமிருந்து பெற்றுத் தரப்படும் என்றார்.

 நாஞ்சில் நாடன்: ஒரு பரிசு அறிவிக்கப்படுகின்றபோது ஆதரவாகவும், எதிராகவும் எழும் குரல்கள் அந்த விருதின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்கின்றன. நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே பொசியும். நமது மொழியில் உள்ள துர்பாக்கியம் என்னவெனில், அது பெரும்பாலும் புல்லுக்கு மட்டுமே பொசிந்தது என்பதுதான். இந்தச் சூழலில் சு. வெங்கடேசனுக்கு கிடைத்த பரிசு முக்கியத்துவம் பெறுகிறது.

 விஜயநகர சாம்ராஜ்ய உச்சமாக கிருஷ்ணதேவ ராயரின் தலைநகரான ஹம்பியைக் காணாதவர்கள் நாயக்கர் கால வரலாறு அறியாதவர்கள். அவர்களால் காவல் கோட்டத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றார் நாஞ்சில் நாடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com