சுடச்சுட

  
  18cocunttree

  தருமபுரி: தென்னை நார் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விளைநிலத்தின் ஈரப்பதத்தைக் காக்கும் என்று கயிறு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் இயற்கை உரம் தயாரிப்போருக்கு கயிறு வாரியம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது.

   இது குறித்து கயிறு வாரியம் தெரிவித்துள்ளதாவது:

   தென்னை மரத்திலிருந்து விளைபொருளாகக் கிடைக்கும் தேங்காய், மனித வாழ்வில் பல விதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேங்காய் மட்டைகளோ முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், தென்னை நாரை பிரித்தெடுக்கும்போது உபரியாகக் கிடைக்கும் நார் கழிவுகளைப் பயன்படுத்தும் முறையைப் பெரும்பாலான விவசாயிகள் உணராமலேயே உள்ளனர். இதனால் பல இடங்களிலும் நார் கழிவு வீணாக்கப்பட்டு வருகின்றன.

   நார் கழிவிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விளைநிலத்தை பண்படுத்துவதுடன், தேவையற்ற ரசாயன உரச் செலவுகளையும் கட்டுப்படுத்தலாம்.

   இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கிலோ நார் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ கயிறு நார் உற்பத்தி செய்யப்படும்போது 2 கிலோ நார் கழிவு கிடைக்கிறது. இந்த வகையில் மொத்தம் ரூ.20 கோடி மதிப்புள்ள இயற்கை உரம் தயாரிக்க வழி உள்ளது. ஆனால், நடைமுறையில் இத்தகைய இயற்கை உரம் தயாரிக்கப்படுவதில்லை.

   வீணாகும் நார் கழிவை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு வேளாண்மைப் பலக்லைக்கழகத்துடன் இணைந்து, கயிறு வாரியம் நடத்திய சோதனைகளால் இயற்கை உரம் தயாரிக்கும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.

   இத் திட்டத்தின் கீழ் நார் கழிவுகளை ஒரு மாதத்தில் இயற்கை உரமாக மாற்ற முடியும். இவற்றுக்கு அடிப்படைக் காரணியாக "பிளேரேட்டஸ்' எனும் நுண்ணுயிர் காரணியாக உள்ளது. நாய் குடை வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரே நார் கழிவை இயற்கை உரமாக மாற்றுகிறது. இதற்கு உறுதுணையாக யூரியா சேர்க்கையும் உள்ளது.

   நார் கழிவு தயாரிக்கும் முறை

   விவசாயிகள் தங்களது தோட்டங்களிலேயே நார் கழிவை இயற்கை உரமாக மாற்ற முடியும். திறந்த வெளியில் நிழல் உள்ள இடங்கள் சிறந்தவை. 5 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் உள்ள இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், 100 கிலோ நார் கழிவை சீராகப் பரப்ப வேண்டும். இதனுடன் 400 கிராம் "பித் பிளஸ்' சேர்க்கவும். இந்த அடுக்கின் மீது 100 கிலோ நார் கழிவை பரப்ப வேண்டும். இதனுடன் 1 கிலோ யூரியாவை சேர்த்து பரப்பவும்.

   நார் கழிவு-பித் பிளஸ்-நார் கழிவு-யூரியா ஆகியவை சேர்ந்தது ஒரு அடுக்காக கணக்கிட வேண்டும். இதேபோல், 1 மீட்டர் உயரம் வரையில் பல அடுக்குகளை உருவாக்க வேண்டும். இவை உரமாக மாற ஒரு மாத காலம் தேவைப்படும். நார் கழிவு உலராமல் 200 சதவீதம் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். இவை இயற்கை உரமாக மாறிய நிலையில் கறுத்த நிறமும், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் காணப்படும். மேலும், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், செம்பு உள்ளிட்ட கலவையும் கூடுதலாக இருக்கும்.

   மானியம் ரூ.1 லட்சம்

   நார் கழிவை உரமாக்கி பயிர்களுக்கு இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படச் செய்கிறது. இது மண்ணின் ஈரப்பதத்தை காத்து வறட்சி காலத்தில் செடிகளுக்கு உதவுகிறது.

   நார் கழிவை உரமாக மாற்றும் விவசாயிகளை ஊக்குவிக்க கயிறு வாரியம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. இதற்கு ஆகும் செலவு மிகக்குறைவு. ஒரு டன் நார் கழிவை உரமாக மாற்ற ரூ.50 மதிப்புள்ள 2 கிலோ பித் பிளஸ், ரூ.25 மதிப்புள்ள 5 கிலோ யூரியா தேவை. ஒரு டன் நார் கழிவில் 580 கிலோ இயற்கை உரம் உற்பத்தி செய்யலாம். மேலும், விவரங்களுக்கு கயிறு வாரிய மண்டல அலுவலகத்தை 04259-222450 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai