சுடச்சுட

  
  29naveenan

  சென்னை, பிப்.29: "சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் முதல் ஆசிரியரும், பிரபல பத்திரிகையாளருமான நவீனன் (94) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை பிற்பகலில் காலமானார். கடந்த சில மாதங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

   மறைந்த நவீனனுக்கு 2 மகன்கள், 4 மகள்கள்

   உள்ளனர்.

   பம்மலில் உள்ள இடுகாட்டில் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. தொடர்புக்கு: 96773 - 34314.

   17 வயதிலேயே: அவர் தனது 17-வது வயதிலேயே பத்திரிகைத்துறைக்கு வந்து விட்டார். "நவயுவன்' என்ற பத்திரிகை மூலம் தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து "சுதேசமித்ரன்', "மஞ்சரி', "தென்றல் திரை' உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார்.

   "நவீனன்' என்ற பெயரில் தினசரி பத்திரிகை தொடங்கினார். முழுக்க முழுக்க சினிமா செய்திகளை மட்டுமே தாங்கி இது வெளிவந்தது. பொருளாதார நெருக்கடியால் இப்பத்திரிகையை அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதன் பின் "தினமணி கதிர்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றினார்.

   எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து 1980-ம் ஆண்டு "சினிமா எக்ஸ்பிரஸ்' தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராக நவீனன் நியமிக்கப்பட்டார். "தினமணி' நாளிதழ் வெளியிட்ட அண்ணா பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்பு சினிமா மற்றும் அரசியல் உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தினமணி கதிரில் தொடராக எழுதி வந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள பூதலூர் கிராமத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் முத்துசாமி.

   முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடு நெருங்கிப் பழகியவர்.

   2009-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், மணிமேகலை மன்றம் வழங்கிய இலக்கியச் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்புவரை, சினிமா எக்ஸ்பிரஸில் "நவீனனின் நினைவுக் குறிப்புகள்' என்ற பெயரில் எழுதி வந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai