அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு "நம்பர் பிளேட்': புதுவையில் இம்மாத இறுதிக்குள் அறிமுகம் எஸ். ஜெய்சங்கர்

புதுச்சேரி, மார்ச் 23: புதுச்சேரியில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும், பதிவாகும் புதிய வாகனங்களுக்கும் இனி உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட இருக்கின்றன. தென்னிந்தியாவில் முதல் முறையாக இ
அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு "நம்பர் பிளேட்': புதுவையில் இம்மாத இறுதிக்குள் அறிமுகம் எஸ். ஜெய்சங்கர்

புதுச்சேரி, மார்ச் 23: புதுச்சேரியில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும், பதிவாகும் புதிய வாகனங்களுக்கும் இனி உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட இருக்கின்றன.

தென்னிந்தியாவில் முதல் முறையாக இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் இம்மாத இறுதியில் தொடங்கப்படுகிறது. ஜூன் 15-ம் தேதிக்குள் அனைத்து வாகனங்களுக்கும் புதிய நம்பர் பிளேட்டுகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வாகனங்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க, சாலைகளில் பயன்படுத்தப்படும், பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை ஜூன் 15-ம் தேதிக்குள் பொருத்தி முடித்திருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.

இதன் பின்னணியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. இதில், தென்னிந்தியாவில் முதல்முறையாக புதுச்சேரியில் இம்மாத இறுதிக்குள் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளைத் தயாரிப்பதற்கு ஹைதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கான இடம் புதுச்சேரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளேட் தயாரிப்பதற்கான புதிய இயந்திரம் ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்படுகிறது. இன்னும், ஒரு வாரத்துக்குள் அந்த இயந்திரம் புதுச்சேரி வந்துவிடும். அதற்கு முன்னதாக, கைவசம் இருக்கும் இயந்திரத்தின் உதவியோடு, இம்மாத இறுதிக்குள், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தும் பணி தொடங்க இருக்கிறது.

புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் இதுவரை சுமார் 6.75 லட்சம் வாகனங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள், வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறு பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே, புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் வாகனங்களுக்கு இவ்வாறு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த வேண்டியிருக்கும்

அதேபோல மாஹே, யேனம், காரைக்கால் பகுதிகளில் இயங்கும் வாகனங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாற்றிக்கொள்ளலாம். தமிழகப் பதிவு எண்கள் கொண்ட வாகனங்களுக்குப் புதுவையில் நம்பர் பிளேட் மாற்றப்படாது. அவர்கள் தமிழகத்தில்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நம்பர் பிளேட்டில் இடம்பெறுபவை: நம்பர் பிளேட்டில் வாகனத்தின் பதிவு எண் சூப்பர் எம்போஸ் முறையில் அச்சிடப்பட்டிருக்கும். அதன் இடது பக்க மேல் பகுதியில் அசோகச் சக்கரத்தின் சின்னம் கொண்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இதை எடுக்க முடியாது.

அதற்கு சற்று கீழே, இந்தியாவைக் குறிக்கும் வகையில் ஐஎன்டி (ஐசஈ) என்ற எழுத்து இடம்பெற்றிருக்கும். அதற்கும் கீழே, 7 இலக்க ஒரு தனி எண் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாகனத்துக்கும் இந்த அடையாள எண் மாறும். அதற்கு கீழே, வாகனத்தின் சேஸ் எண்ணும், என்ஜின் எண்ணும் பொறிக்கப்படும்.

இந்த நம்பர் பிளேட்டை வாகனத்தில் பொருத்த சிறப்பு ரிவிட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை வாகனத்தோடு நம்பர் பிளேட்டை பொருத்திவிட்டால், பிறகு உடைத்துதான் எடுக்க வேண்டியிருக்கும், கழற்றி மறுபடி பொருத்த முடியாது.

பாதுகாப்பு அம்சம் :

வாகனத்தின் உரிமையாளர் விவரங்கள் அனைத்தும், தேசிய அளவில் அனைத்து போக்குவரத்து அலுவலகங்களோடு ஆன்லைனில் இணைக்கப்பட்டிருக்கும். நம்பர் பிளேட்டில் இருக்கும் எந்த ஒரு எண்ணையும் கொண்டு, அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி, சாலை வரி செலுத்தப்பட்டது, வாகனத்தின் ஆயுள்காலம் என அனைத்து விவரங்களையும் எந்த மாநிலத்திலும் கண்டறிந்துவிட முடியும்.

மேலும், வாகனத்தோடு இணைக்கப்பட்டிருந்த நம்பர் பிளேட்டுகள் சேதமடைந்தாலோ, உடைந்தாலோ, அதை மீண்டும் பொருத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அவசியம் நேரில் வந்தாக வேண்டும். எனவே, ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டை, அதிகாரிகளுக்குத் தெரியாமல் மாற்றிவிட முடியாது. இதனால், வாகனங்கள் திருடுபோவது தடுக்கப்படும் என்கின்றனர் போக்குவரத்து அதிகாரிகள்.

புதியவை, பழையவை அனைத்துக்கும்... : புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவாகும் புதிய வாகனங்களுக்கும், ஏற்கெனவே சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கும் இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தும் பணி ஒரே நேரத்தில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் முன்பும், பின்பும் ஒரே நேரத்தில் இவை பொருத்தப்படும். இவற்றை ஒரு செட் எனக் குறிப்பிடுகின்றனர். கூடுதலாக கார்களுக்கு மட்டும் கண்ணாடியில் ஒட்டும் ஸ்டிக்கர் தரப்படுகிறது. இவை அனைத்துக்குமான கட்டணம், வாகன உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

கட்டணங்கள்: இருசக்கர வாகனங்களுக்கு ரூ.105.55, மூன்று சக்கர வாகனங்களுக்கு (ஊனமுற்றோர் பயன்படுத்தும் வாகனம் உள்பட) ரூ.126.55, இலகு ரக வாகனங்களுக்கு (கார் போன்ற 4 சக்கர வாகனங்கள்) ரூ.309.83, கனரக வாகனங்களுக்கு (லாரி, பஸ்கள் போன்றவை) ரூ.345.83 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களைப் பெற்று, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள தனியார் அமைப்பு பொருத்தும்.

இதில் வசூலாகும் தொகையில் 4 சதவீதம் ராயல்டியாக அரசுக்குச் செலுத்தப்படும். சேதமடையும் நம்பர் பிளேட்டுகளை மறுபடி இங்கு பொருத்தவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சேதத்துக்கு தகுந்தவாறு மாறுபடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com