Enable Javscript for better performance
உச்ச நீதிமன்றம் மூலம் தேவையான காவிரி நீர் கிடைக்கும்: முதல்வர் நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உச்ச நீதிமன்றம் மூலம் தேவையான காவிரி நீர் கிடைக்கும்: முதல்வர் நம்பிக்கை

    By தினமணி  |   Published on : 03rd November 2012 01:17 AM  |   அ+அ அ-   |    |  

    jay3

    உச்ச நீதிமன்றம் மூலம் தமிழகத்துக்குத் தேவையான காவிரி நீர் கிடைக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் நம்பிக்கை தெரிவித்தார்.

    சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் (கடலூர்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.உலகநாதன் (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் பேசினர்.

    அதற்குப் பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது: என் தலைமையிலான அரசு எடுத்த உறுதியான தொடர் நடவடிக்கையினாலும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாகவும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் செப்டம்பர் 19-ம் தேதி புது தில்லியில் கூட்டப்பட்டது.

    அதில் இடர்பாடு காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்ளுதல் கணக்கீட்டுப்படி, தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரில் குறைபாடான 48 டி.எம்.சி. நீரை நாளொன்றுக்கு 2 டி.எம்.சி. வீதம் 24 நாள்களுக்கு உடனடியாகத் திறந்துவிட வேண்டுமென்றும், நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகம் தொடர்ந்து நீரை விடுவிக்க ஆணை பிறப்பிக்குமாறும் நான் வலியுறுத்தினேன். கர்நாடகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

    இந்தக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே ஒத்தக் கருத்து ஏற்படாத நிலையில் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடகம் தமிழகத்துக்கு நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால், கர்நாடகம் ஏற்க மறுத்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதன்படி செப்டம்பர் 29-ம் தேதி முதல் நீரை விடுவிக்கத் தொடங்கிய கர்நாடகம், திடீரென்று தன்னிச்சையாக அக்டோபர் 8-ம் தேதி தண்ணீர் விடுவிப்பதை நிறுத்திவிட்டது.

    இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்ட கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அக்டோபர் 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

    இந்தச் சூழ்நிலையில் அக்டோபர் 11-ல் காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சம்பா பாசனத்துக்காக அக்டோபர் 10 முதல் அடுத்த  ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி வரை சுமார் 145 டி.எம்.சி. நீர் தேவைபடும் என்று தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    கர்நாடகத்தின் 4 அணைகளில் போதுமான நீர் இருப்பு இருந்தபோதிலும், கர்நாடகம் நீர் தர மறுத்துவிட்டது. இந்த நிலையில்தான், கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கை எதிர்த்து தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு அக்டோபர் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வேண்டும் என காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்பின் அக்டோபர் 31-ம் தேதி தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி கண்காணிப்புக் குழு, அக்டோபர் 16 முதல் 31 வரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரில் உள்ள பற்றாக்குறையான 2.15 டி.எம்.சி.  தண்ணீரை நவம்பர் 4-ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    மேலும் நவம்பர் 1 முதல் நவம்பர் 15-ம் தேதி வரையிலான காலத்துக்கு 3.94 டி.எம்.சி.  தண்ணீரை விடுவிக்குமாறும், ஆகமொத்தம் 6.09 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு அளிக்கவிருக்கும் கோரிக்கைகள் குறித்தும், தமிழகத்துக்கு மேற்கொண்டு தண்ணீர் விடுவிப்பது குறித்தும் நவம்பர் 15-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கண்காணிப்புக் குழு கூறியது.

    தமிழகத்தில் ஏற்கெனவே குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா சாகுபடியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை எப்படியாவது பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    நான் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டாலும் கர்நாடகம் ஓரளவு தண்ணீரை விடுவிக்க கட்டாயப்படுத்தப்பட்டு, தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கப் பெற்றுள்ளது.

    தமிழகத்துக்கு உரிமைப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும், உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    kattana sevai