Enable Javscript for better performance
பிரதிபா காவேரி கப்பல் சென்னையை விட்டு செல்லக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பிரதிபா காவேரி கப்பல் சென்னையை விட்டு செல்லக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    By தினமணி  |   Published on : 03rd November 2012 02:39 AM  |   அ+அ அ-   |    |  

    pti1

    சென்னையில் தரை தட்டி நிற்கும் பிரதிபா காவேரி கப்பலை, சென்னையிலிருந்து எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம், வானூரைச் சேர்ந்த எம். சங்கர நாராயணன் தாக்கல் செய்த மனு மீது, வெள்ளிக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி என். பால் வசந்தகுமார், இந்த இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

     மனு விவரம்:

     எனது மூத்த சகோதரர் ஆனந்த், மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் நிறுவனத்தின் கப்பலில் கடந்த மே 18ஆம் தேதி பொறியாளராகப் பணிக்கு சேர்ந்தார்.

    நிலம் புயலில் சிக்கி கப்பல் தரைத் தட்டிய நிலையில், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் 22 பேர் கப்பலில் இருந்த படகில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அந்தப் படகு கவிழ்ந்ததில் எனது சகோதரர் உயிரிழந்தார்.

     எனது சகோதரரின் மரணத்துக்குக் காரணமான பிரதிபா காவேரி கப்பல் நிறுவனம், இடைக்கால இழப்பீடாக எங்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கவும், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான நீதி விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

     விசாரணை முடியும் வரை, சென்னையிலிருந்து அந்தக் கப்பலை எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், துறைமுகப் பொறுப்புக் கழகம், மும்பையில் உள்ள கப்பல் நிறுவனம் உள்ளிட்டவை நவம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி பால் வசந்தகுமார், சென்னையிலிருந்து கப்பலை எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை விதித்தும்,  விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

    kattana sevai