
நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றைய நிலையில் சிந்தனை மாற்றம் தேவை என மூத்த பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (தமிழ்நாடு) சார்பில் சுதேசி செய்தி இதழின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் "பாதை - பயணம் - பார்வை' நிகழ்ச்சியின் வைர விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ். குருமூர்த்தி பேசியதாவது:
அமெரிக்கா தற்போது பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அங்கு 51 சதவீத குடும்பங்கள் அரசைச் சார்ந்து இருக்கின்றன. 13 சதவீத குடும்பங்கள் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் இலவசப் பொருள்களை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார வீழ்ச்சி குறித்து ஜெர்மனி நாட்டு இதழ் ஒன்று பொருளாதார நிபுணர்களை பேட்டி கண்டது.
அமெரிக்காவின் பொருளாதார சரிவுக்கு அந்த நிபுணர்களால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க பொருளாதாரத்தை நிர்ணயித்த நிபுணர்களால்கூட இது குறித்து விளக்கம் அளிக்க முடியவில்லை.
ஆய்வின்படி, 1950-ல் அமெரிக்காவில் ஒரு குடும்பத்தின் சராசரி உறுப்பினர்களின் எண்ணிக்கை 3.5 என்றிருந்தது. ஆனால் இன்றைய நிலைமை 2.5 என குறைந்துள்ளது.
இதனால் அவர்களுக்கு மூன்றரை கோடி வீடுகள் அதிகம் தேவைப்படுகின்றன.
இதற்கு காரணம் அங்கு பெரும்பாலான குடும்பங்கள் பிரிந்துள்ளன.
ஆனால் நம் நாட்டில் கலாசாரத்துடன் கூடிய குடும்பப் பாரம்பரியம் காரணமாகவே பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அதேவேளையில் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட வெளிநாடுகளின் பங்கு 1.2 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 98.8 சதவீதமும் நம் நாட்டு முதலீடு ஆகும்.
அதிகரிக்கும் சேமிப்பு: நம் நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதற்கு காரணம் சேமிப்பு. உலகிலேயே பெரிய வங்கி ஒன்று வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்தியா வளர்ச்சியடைவதற்கு ரூ.120 லட்சம் கோடி தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் அதற்கு வெளிநாட்டு முதலீடு தேவையில்லை, இந்திய மக்களின் சேமிப்பே போதுமானது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நம்நாட்டின் சேமிப்பின் மூலம் பிற நாடுகளும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் நமது சிந்தனையில் மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கான பணிகளைத்தான் சுதேசி இயக்கம் மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தைச் சேர்ந்த சுவாமினி யெதீஸ்வரி ஆத்மவிகாஸபிரியா அம்பா கூறுகையில், பெண்களுக்கு கற்பும் தியாகமும் இரண்டு கண்கள். நம் தேசத்துக்காக வாழ்ந்த பல தலைவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் பெண்கள்.
எனவே, பெண்கள் கற்பு மற்றும் தியாக நெறியில் சிறந்து விளங்கினால் நம் நாடு மேலும் வளர்ச்சியடையும் என்றார் அவர்.
முன்னதாக, முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் ராஜா சண்முகம், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தென்னிந்திய அமைப்பாளர் சுந்தரம், மாநில அமைப்புச் செயலர் நம்பி நாராயணன், இணை அமைப்புச் செயலர் இளங்குமார் சம்பத், தமிழக பாஜக துணைத் தலைவர் தமிழிசை செüந்திரராஜன், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் எஸ். வைத்திய சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.