Enable Javscript for better performance
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ: 18 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ: 18 பேர் காயம்

    By dn  |   Published on : 22nd November 2012 12:07 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் சிப்காட் பகுதியில் செயல்படும் தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய 16 தொழிலாளர்கள் மற்றும் இரு தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர்.

    ÷கடலூர், செம்மங்குப்பம் சிப்காட் வளாகத்தில் உள்ள ஆர்கிமா பெராக்சைட்ஸ் கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    ÷புதன்கிழமை மாலை 3 மணி அளவில் கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்த பாய்லர் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ÷பாய்லர் வெடித்ததில் இரும்பு மற்றும் தகடுகள் பல நூறு மீட்டர் தூரத்தில் சிதறியது.

    ÷பாய்லரில் இருந்த 40 டன் ஹைட்ரஜன் பெராக்சைடு வெடித்ததில் தொழிற்சாலையில் சில இடங்களில் தீப்பற்றி எரிந்தது.

    ÷இந்த விபத்தில் தொழிற்சாலைப் பணியாளர்கள் தேவநாதன், பிரபாகரன், மோகன், சிவபாரதி, சந்தானகிருஷ்ணன், சுதாகர், நாராயணன் உள்ளிட்ட 16 பேர் காயம் அடைந்தனர்.

    ÷இவர்கள் அனைவரும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ÷வெடி சப்தத்தின் அதிர்வால் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிக் கதவு, ஜன்னல், கணினி உள்ளிட்டவை உடைந்து விழுந்தன. வான் உயர எழும்பிய கறும்புகை மற்றும் பாய்லர் வெடித்த சப்தத்தால் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    ÷500-க்கும் மேற்பட்டவர்கள் கம்பெனி வளாகத்தின் அருகே கூடினர்.

    ÷தகவல் அறிந்தவுடன் பல்வேறு பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ÷பணியின்போது இரு தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    ÷கறும்புகை செம்மங்குப்பம், சோனஞ்சாவடி, வைரங்குப்பம், பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம், நடுத்திட்டு, நொச்சிக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதியைச் சூழ்ந்தது.

    ÷இதனால் கண் எரிச்சல் மற்றும் தொண்டை பாதிப்பு ஏற்பட்டது. சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் பதற்றம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ÷விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ, கண்காணிப்பாளர் ராதிகா, சார்-ஆட்சியர் லலிதா, வட்டாட்சியர் எழிலன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    kattana sevai