Enable Javscript for better performance
திருவாவடுதுறை ஆதீனம் காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    திருவாவடுதுறை ஆதீனம் காலமானார்

    By தினமணி  |   Published on : 23rd November 2012 04:09 AM  |   அ+அ அ-   |    |  

    np22adi

    திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் வியாழக்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார்.

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனம். கி.பி 14-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள தொன்மையான சைவ ஆதீனங்களுள் ஒன்று.

    நவம்பர் 5-ம் தேதி ஆமதாபாதில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டில் பங்கேற்க சென்றபோது சன்னிதானத்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு இதய மருத்துவச் சிகிச்சை நடந்தது. 19-ம் தேதி அவர் ஆதீனத்துக்குத் திரும்பினார்.

    இந்நிலையில், வியாழக்கிழமை காலை சுமார் 1 மணிக்கு, அவருக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

    வாழ்க்கைக் குறிப்பு : திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் சைவ வேளாளர் மரபைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் கோமதி நாயகம்- கோமதி தம்பதியருக்கு 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பிறந்தவர் சிவப்பிரகாச தேசிகர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.

    கூட்டுறவுப் படிப்பில் பட்டயம் பெற்ற இவர், 1978-ம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தின் 22-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பராமச்சார்ய சுவாமிகளிடம் தீட்சை (துறவு) பெற்று, அந்த மடத்தில் சீடராகப் பணியாற்றினார்.

    1980-ம் ஆண்டில் அந்த ஆதீனத்தின் இளைய சன்னிதானமாகப் பொறுப்பேற்ற சிவப்பிரகாச தேசிகர், 1983-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி 23-வது சன்னிதானமாக பட்டமேற்றார்.

    தபோவனத்தில் சமாதி:முக்தியடைந்த சிவப்பிரகாச தேசிகரின் உடல், ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டு, ஆதீனத்துக்கு அருகே உள்ள மறைஞான தபோவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ஆதீன கர்த்தர்கள் மரியாதை: மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், திருப்பனந்தாள் காசிமட அதிபர் காசி வாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்ட ஆதீனங்கள் மற்றும் மடங்களின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், ஏ.ஆர். அருள்செல்வன், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பொ. ரெத்தினசாமி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

    24-வது ஆதீனமாக அம்பலவாண தேசிகர் பட்டமேற்பு: திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குருமகா சன்னிதானமாக அம்பலவாண தேசிக பண்டார சன்னிதி (52) வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

    புதிய குருமகா சன்னிதானத்தை தேர்வு செய்த பின்னரே, முக்தியடைந்த குருமகா சன்னிதானத்துக்கு சமாதி வைக்க வேண்டும் என்பது ஆதீன விதி. இதன்படி, திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நிர்வாகத்தை ஏற்றிருந்த மீனாட்சிசுந்தரம் தம்பிரான், அம்பலவாண தேசிக பண்டார சன்னிதிகள் என்ற புதிய பெயருடன் திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குருமகா சன்னிதானமாகப் பட்டமேற்றார்.

    இவர், தஞ்சாவூர் மாவட்டம், அன்னப்பன்பேட்டையில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர். சைவ, சித்தாந்த திருமுறைகளில் தேர்ச்சி பெற்றவர், கடந்த 25 ஆண்டுகளாக திருவாவடுதுறை ஆதீனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இரங்கல்: சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் எஸ். வேதாந்தம், மத்திய இணைச் செயலர் சு. கோபாலரத்தினம், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம. கோபாலன்,  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    எதிர்ப்பு: இதனிடையே திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது ஆதீன கர்த்தர் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம் என்றார் அந்த மடத்தின் முன்னாள் இளைய ஆதீனம் காசி விஸ்வநாத பண்டார சன்னிதி.

    மயிலாடுதுறையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியில்; என் மீது குற்ற வழக்கைத் தொடர்ந்து, எனது இளைய ஆதீன கர்த்தர் பதவியை நீக்கம் செய்து அறிவித்தார் 23-வது குருமகா சந்நிதானம்.

    இது சட்டத்துக்குப் புறம்பானது. சென்னை உயர்நீதிமன்றம் வரையறுத்த ஆதீன நிர்வாகத் திட்டப்படி, என்னை  திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக நியமிக்க வலியுறுத்தி விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp