Enable Javscript for better performance
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்- Dinamani

சுடச்சுட

  

  முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

  By dn  |   Published on : 24th November 2012 01:30 AM  |   அ+அ அ-   |    |  

  திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் (75) உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

  நுரையீரல் கோளாறு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த வீரபாண்டி ஆறுமுகம், நவம்பர் 17-ம் தேதி போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  இதய நோய் சிகிச்சை நிபுணர் எஸ்.தணிகாசலம், நுரையீரல் சிகிச்சை நிபுணர் ராஜகோபால் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் 20-ம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மரணமடைந்தார்.

  கருணாநிதி கண்ணீர்: வீரபாண்டி ஆறுமுகம் மறைவு செய்தி கிடைத்ததும் திமுக தலைவர் கருணாநிதி ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோரும் உடன் வந்தனர்.

  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறுமுகம் உடலுக்கு கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் இரங்கல் தெரிவித்துக் கூறும்போது, திமுகவின் தூண்களில் ஒன்று சாய்ந்து விட்டது என்றார்.

  மாறன் நாளில்... முரசொலி மாறனுக்குப் பிறகு மனதில் பட்ட கருத்துகளைத் தைரியமாகக் கூறியவர் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும்தான். இந்த ஒற்றுமையோ என்னவோ முரசொலி மாறனின் 9-ம் ஆண்டு நினைவு நாளான வெள்ளிக்கிழமையே ஆறுமுகமும் இறந்துள்ளார். இது வியப்புக்குரிய வேதனை என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

  திமுக முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன், ஆற்காடு வீராசாமி, தயாநிதி மாறன் உளளிட்ட முக்கிய திமுக பிரமுகர்களும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

  3 நாள்கள் நிகழ்ச்சிகள் ரத்து: வீரபாண்டி ஆறுமுகம் மறைவையொட்டி 3 நாள்களுக்கு திமுக அமைப்பின் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்றும், கட்சி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

  வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ரங்கநாயகி என்ற மனைவி மூலம் மகேஸ்வரி,  நிர்மலா ஆகிய மகள்களும், நெடுஞ்செழியன்,ராஜா என்ற இரு மகன்களும், லீலாவதி என்ற துணைவி மூலம் டாக்டர் பிரபு என்ற மகனும் உள்ளனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். இவர் 2001-ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

  வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூலாவரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

  அங்கு அவர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

  பின்னர் வி.எஸ்.ஏ. கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை (நவம்பர் 24) மாலை  நடைபெற உள்ளன.

  6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்
  கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த வீரபாண்டி ஆறுமுகம். சேலம் மாவட்டம் பூலாவரியில் சோலைக்கவுண்டர் - சின்னம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகனாக 26.1.1937 அன்று பிறந்தார். பள்ளியில் இருந்து இடைநின்ற அவர், இளம் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் ஈடுபாடு மிக்கவராக இருந்தார்.

  பூலாவரியில் 1958-ல் திமுக கிளைச் செயலராகவும், பூலாவரி ஊராட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1959-ல் பூலாவரி கூட்டுறவு நாணய சங்கத் தலைவரானார்.

  1962 தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாரியப்பனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார்.

  1967, 1971, 1989, 1996, 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

  திமுகவின் சேலம் மாவட்டச் செயலராக தொடர்ந்து 40 ஆண்டுகள் பதவி வகித்து வந்த வீரபாண்டி ஆறுமுகம், 1978 முதல் 1984-ம் ஆண்டு வரையிலும் சட்ட மேலவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். திமுகவில் அண்ணா, கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், திமுகவின் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் மூத்த தலைவராக விளங்கினார்.

  kattana sevai