"டெங்கு: நிலவேம்புக் கஷாயம் வழங்க அரசு மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை'

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீர் (கஷாயம்), பப்பாளி இலைச்சாறு, மலை வேம்புக் கஷாயம் ஆகியவை அலோபதி மருந்துகளுடன் சேர்த்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
"டெங்கு: நிலவேம்புக் கஷாயம் வழங்க அரசு மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை'

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீர் (கஷாயம்), பப்பாளி இலைச்சாறு, மலை வேம்புக் கஷாயம் ஆகியவை அலோபதி மருந்துகளுடன் சேர்த்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக 9,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்; இதுவரை சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலின் தீவிரத்தைக் குறைப்பதற்கும், தட்டணுக்கள் குறைவதைத் தடுப்பதற்கும் சித்த மருத்துவ மருந்தான நிலவேம்புக் கஷாயம் பரிந்துரைக்கப்பட்டது. அதன் மூலம் டெங்குவின் தாக்கம் குறைவது ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்புச்சாறு ஆகியவற்றை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருந்துகளை டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்து பேசியது:

டெங்குவை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் அலோபதி மருத்துவத்தில் இல்லை.

அதனால், சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் நிலவேம்புக் குடிநீர் உள்ளிட்ட மருந்துகளை வழங்குவதற்கு அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அதனால், டெங்குவால் பாதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் இந்த கஷாயங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.

இது குறித்து சித்த மருத்துவ ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியது: டெங்கு காய்ச்சலை நிலவேம்புக் குடிநீர் கட்டுப்படுத்தும்; மலை வேம்புக் கஷாயம் வைரஸ்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்; பப்பாளி இலைச் சாறு ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். இவை அனைத்திலும் 5 முதல் 10 மி.லி. அளவு எடுத்து நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு முறை குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு குறைந்த அளவு கஷாயத்தை தேன் கலந்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றார் அவர்.

சிறப்பு மருத்துவக் குழு: அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் வழங்குவதற்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.

இந்தக் குழுவில் 5 முதல் 6 டாக்டர்கள் இடம்பெறுவார்கள். இவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள டெங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் கஷாயங்கள், வேம்புச் சாறுகள் அளவுகள் குறித்து தெரிவிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு, டெங்கு காய்ச்சல் சிறப்புப் பிரிவிற்கு சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு கஷாயங்களை அமைச்சர் டாக்டர் விஜய் வழங்கினார்.

உடன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சித்த மருத்துவக் கல்லூரி ஆணையர் ராமநாதன், அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் வே.கனகசபை, ஆர்.எம்.ஓ. ராஜேஸ்வரி உள்பட பலர் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com