Enable Javscript for better performance
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: டிசம்பர் 3 முதல் மழை பெய்யும்- Dinamani

சுடச்சுட

    

    புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: டிசம்பர் 3 முதல் மழை பெய்யும்

    By dn  |   Published on : 30th November 2012 01:18 AM  |   அ+அ அ-   |    |  

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்தது. இதனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.

    ஏற்கெனவே தென்மேற்குப் பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில், வடகிழக்குப் பருவமழையும் இதுவரை போதிய அளவு பெய்யவில்லை.

    இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வடகிழக்குப் பருவமழை சரிவரப் பெய்யாததால் கவலையில் உள்ள விவசாயிகளுக்கு இது ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.

    இது குறித்து வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கூறியது:

    புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அந்தமான் கடலில் உருவாகியுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்துக்குள் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

    kattana sevai