Enable Javscript for better performance
பேரவை வைர விழா: பிரணாப் இன்று வருகை- Dinamani

சுடச்சுட

    

    பேரவை வைர விழா: பிரணாப் இன்று வருகை

    By dn  |   Published on : 30th November 2012 03:36 AM  |   அ+அ அ-   |    |  

    pranab

    தமிழக சட்டப் பேரவையின் வைர விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) சென்னை வருகிறார்.

    இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, 1952-ம் ஆண்டு முதல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, வைரவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாவினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைக்கிறார். ஆளுநர் கே.ரோசய்யா தலைமை தாங்குகிறார். முதல்வர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார்.

     

    விழா மலர் வெளியீடு: வைர விழாவையொட்டி, சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மலரை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். இதன்பின், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான விடுதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டுகிறார்.

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் வாழ்த்துரையும், முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையும், ஆளுநர் கே.ரோசய்யா தலைமையுரையும் நிகழ்த்துகின்றனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்புரையாற்றுகிறார். வைர விழா நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணிக்கு நிறைவடைகின்றன. இதன்பின், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட முக்கியப் பிரமுகர்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா தேநீர் விருந்து அளிக்கிறார். இதன்பின், தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புறப்பட்டுச் செல்கிறார். வைர விழா நிகழ்ச்சிகளையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    kattana sevai