Enable Javscript for better performance
போலீஸாருக்கு ரூ.455 கோடியில் 2,673 வீடுகள்: ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

    

    போலீஸாருக்கு ரூ.455 கோடியில் 2,673 வீடுகள்: ஜெயலலிதா

    By dn  |   Published on : 05th October 2012 11:29 PM  |   அ+அ அ-   |    |  

    jayainspect

    காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு ரூ.455 கோடியில் கட்டப்பட்ட உள்ள 2,673 வீடுகளுக்கான பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இந்தத் திட்டத்துக்கான மாதிரி வடிவமைப்பை வெள்ளிக்கிழமை அவர் பார்வையிட்டார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

    தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றும்போது, உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின்கீழ் காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் சிறைத் துறை பணியாளர்களுக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலமாக வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தார்.

    இந்தத் திட்டத்துக்கென காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் மேலக்கோட்டையூர் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 47.60 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.

    இந்த இடம் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    எத்தனை வீடுகள்? இந்தத் திட்டத்தின்கீழ், மொத்தம் 2,673 வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டம் ரூ.455.50 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

    காவலர், தலைமைக் காவலர், தீயணைப்பவர், உதவி தீயணைப்பவர், சிறைக் காவலர்கள், தலைமைச் சிறைக் காவலர்கள் என 1,317 பேருக்கும், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், நிலைய அலுவலர், உதவி கோட்ட அலுவலர் மற்றும் உதவி சிறை அலுவலர் 1,190 பேருக்கும், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், கோட்ட அலுவலர், சிறை அலுவலர்கள் 166 பேருக்கும் இந்தத் திட்டத்தால் பயன் கிடைக்கும்.

    இந்தத் திட்டத்துக்கான மாதிரி வடிவமைப்பை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    மேலும், இந்த இடத்தில் கூடுதல் வசதிகளாக பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், விளையாட்டு மைதானம், அங்காடி வளாகம், காவலர் சலுகை விலை விற்பனை நிலையம், காவலர் புறநோயாளி மருத்துவமனை ஆகியவை அமைத்துத் தரப்பட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது, உள்துறை செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

     

     

    kattana sevai