சுடச்சுட

  
  kerala

  பெ.நா.பாளையம், செப். 9: பவானி ஆற்றில் அணை கட்டும் கேரள அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ள, ஆனைகட்டியில் இருந்து கேரளத்துக்குள் நுழைய முயன்ற எம்.பி. உள்பட 650 பேர் கைது செய்யப்பட்டனர்.

  அகழியை அடுத்துள்ள சித்தூர் என்ற இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.450 கோடி செலவில் தடுப்பணை கட்ட கேரளம் முயற்சித்து வருகிறது. இதனால் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  கேரளத்தின இந்த முயற்சியைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றன. இருப்பினும் கேரள அரசு தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

  இந்நிலையில், தடுப்பணை கட்டத் திட்டமிடப்பட்டுள்ள சித்தூரிலேயே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடத்த அனைத்துக் கட்சியினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் கேரள அரசு இதற்கு அனுமதியளிக்கவில்லை.

  எனவே தடையை மீறி உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என திமுக, மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொங்கு முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

  இதையடுத்து தமிழக - கேரள எல்லையின் இருபுறமும் இருமாநில போலீஸாரும் மூன்று இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  இந்நிலையில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், கேரள எல்லையில் குவிந்தனர்.

  இங்கு நடந்த கண்டனக் கூட்டத்திற்கு ஆனைகட்டி சுரேந்திரன், 24.வீரபாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சசிமதன், தடாகம் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், தபெதிக தலைவர் கு.ராமகிருஷ்ணன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுசி கலையரசன், கொங்கு முன்னேற்றக் கழகத்தின் நாகராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.

  தொடர்ந்து போலீஸாரின் தடுப்புகளைத் தள்ளிவிட்டு, கேரளத்துக்குள் நுழைய தொண்டர்கள் முயன்றனர்.

  இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) நிஜாமுதீன் தலைமையிலான போலீஸார் தடுத்து, 50 பெண்கள் உள்பட 650 பேரைக் கைது செய்தனர். அவர்கள் ஆனைகட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai