நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 120 பேர் மீட்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது,  படகு
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 120 பேர் மீட்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது,  படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 120 பேரை காரைக்கால் கடலோரக் காவல் படையினர் சனிக்கிழமை மீட்டனர்.

நெல்லை மாவட்டம், தோகமலை நல்லூர், வாலாஜாபேட்டை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருக்கும் இலங்கை  அகதிகள் முகாம்களைச் சேர்ந்த பலர் முகவர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

இவர்கள் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி வந்து அங்கிருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவில் விசைப் படகில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.

படகு கிளம்பிய சில மணி நேரங்களில் காரைக்காலில் இருந்து கிழக்கே 11 கடல்மைல் தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் சனிக்கிழமை  அதிகாலை அந்தப் படகு பழுதடைந்து நின்றது.

அப்போது, படகின் ஜிபிஆர்எஸ் கருவியும், படகும் இயக்க முடியாதவாறு பழுதடைந்தது ஓட்டுநருக்கு தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதற்காக பணம் வாங்கிய முகவர்களும், படகின் ஓட்டுநரும் வேறு படகின் மூலம்  அதிலிருந்து தப்பிவிட்டனர். அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் சிக்கியது அந்த வட்டாரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு தெரிய வந்தது.

அவர்கள் காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையின் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படைக்கு சொந்தமான கப்பல் விரைந்து சென்று, படகிலிருந்த அகதிகளை மீட்டுக் கொண்டு  காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு

சனிக்கிழமை மாலை வந்தது.

அகதிகள் அனைவரும் கடலோரக் காவல் படையின் காரைக்கால் கமாண்டன்ட் உதல்சிங் முன்னிலையில் கப்பலில் இருந்து இறக்கப்பட்டனர். பிறகு  அவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமியிடம் காவல் படையினர் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக நாகை கடலோர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கப்பலில் வந்திறங்கிய அகதிகள் கூறியது:

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முகவருக்கு தலா ரூ. 1.50 லட்சம் கொடுத்தோம். படகு பழுதடைந்ததும், ஓட்டுநர், முகவர் அனைவரும் எங்களை  விட்டுவிட்டு வேறு படகில் தப்பிவிட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் சிறிது காலம் சிறையிலிருந்துவிட்டு, பிறகு வேலை கிடைக்கும் என்று  அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பியே பணம் கொடுத்தோம் என்றனர்.

இவர்களில் 6 கைக்குழந்தைகள், ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 120 பேர் இருந்தனர்.

நாகையில் தங்க வைக்கப்பட்ட அகதிகள்: நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். ராமகிருஷ்ணன்  உள்ளிட்டோர், காரைக்கால் துறைமுகத்துக்கு சனிக்கிழமை மாலை சென்று, அகதிகள் 120 பேரையும் நாகை மாவட்ட ஆட்சியரகத்துக்கு அழைத்து  வந்தனர்.

அகதிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் உள்ளிட்ட 120 பேரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் உணவின்றி வாடுவது குறித்துத் தகவலறிந்த  ஆட்சியர், அகதிகள் 120 பேருக்கும் உடனடியாக உணவு, தண்ணீர், பழம், பால் ஆகியன வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

கர்ப்பிணிக்கு சிகிச்சை: காரைக்காலில் கரையேற்றப்பட்ட மதுரை அகதிகள் முகாமைச் சேர்ந்தவரான கே. திலகேஸ்வரிக்கு (37) திடீரென உடல் நலக்  கோளாறு ஏற்பட்டது. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ கால உபாதை ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அவர், உடனடியாக  நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடியுரிமையே பிரச்னை: சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும் தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை  கிடைக்காததால், அரசுப் பணி வாய்ப்பு உள்பட எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதே தமிழகத்திலிருந்து வெளியேற முயன்றதற்குக் காரணம் என  அகதிகள் பலரும் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 3 மாத காலத்திலேயே குடியுரிமையும், நல்ல வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. அதனால்தான் ஆஸ்திரேலியாவில் குடியேறத்  திட்டமிட்டுப் புறப்பட்டோம். வாழ்வா, சாவா போராட்டத்தின் காரணமாக இந்த முடிவை மேற்கொண்டோம் என அகதிகளில் சிலர் தெரிவித்தனர்.

ஏடிஜிபி விசாரணை: தமிழக கடலோர காவல்படை ஏடிஜிபி சைலேந்திரபாபு சனிக்கிழமை இரவு நாகை மாவட்ட ஆட்சியரகம் வந்து அகதிகளிடம்  விசாரணை மேற்கொண்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். ராமகிருஷ்ணன், உதவி கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர்  உடனிருந்தனர்.

பிரதமரிடம்  பேசிய வைகோ
நடுக்கடலில் 120 ஈழத் தமிழர்கள் தத்தளித்துக் கொண்டிருப்பது குறித்து தகவலறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர்  மன்மோகன் சிங்கை சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்களைக் காப்பாற்றுமாறு  பிரதமரிடம் வைகோ கேட்டுக் கொண்டார்.

மேலும் துபையில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட உள்ள 19 ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டியும் பிரதமரிடம் வைகோ கோரினார்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்ததாக மதிமுக தலைமைக் கழகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com