சுடச்சுட

  

  ராமநாதபுரம், தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா

  By dn  |   Published on : 11th April 2013 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya

  கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க 6 மாவட்டங்களில் ரூ. 797.69 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

  மேலும், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

  சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை படித்தளித்த அறிக்கை:

  தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

  இதன் மூலம் 3.80 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற முடியும். இதேபோன்று ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இருப்பின் உள்ளூர் நீர் ஆதாரங்களின் தரமும், நம்பகத்தன்மையும் இப்போது குறைந்து வருவதால் இந்த மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நிரந்தத் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.

  ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்னை நிலவுகிறது. எனவே, சென்னை மாநகரத்தின் நீர்த் தேவையை சமாளிக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது போன்று அனைத்து காலங்களிலும் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும்.

  புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு ரூ.450 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சாணார்பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை, திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 5 லட்சத்து 62 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு ரூ.125 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், பேராவூரணி, பெருமகளூர், அதிராமப்பட்டினம் பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 5 லட்சத்து 76 ஆயிரம் மக்கள் பெறுவர்.

  கோவை மாவட்டத்தில் பவானி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு ரூ.114.25 கோடியில் தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, தென்கரை, வேடப்பட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் ஆகிய ஏழு பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் 1.55 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

  திருப்பூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு ரூ.76.44 கோடியிலும், திருச்சி மாவட்டத்தில் ரூ.32 கோடியிலும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 6 மாவட்டங்களிலும் ரூ.797.69 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நடப்பாண்டில் (2013-14) செயல்படுத்தப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai