அண்ணாமலைப் பல்கலை.யை அரசே ஏற்கிறது: மசோதா தாக்கல்

தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான சட்ட மசோதா தாக்கல்

தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு 1928-ல் கொண்டுவரப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் முடிவுக்கு வருகிறது.

சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் திங்கள்கிழமை தாக்கல் செய்த இந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அரசுக்கு அளித்த கல்லூரிகள், சொத்துகள், ரூ.20 லட்சம் ஆகியவற்றைக் கொண்டு 1928-ல் தனிச் சட்டம் மூலம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இந்த தனிச் சட்டத்தின்படி ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளுக்கு நிறுவனர் என்ற அங்கீகாரத்துடன் சில அதிகாரங்கள், சலுகைகள் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் என்ற முறையில் எழுத்தர் மற்றும் பிற ஊழியர்களை நியமிப்பது, பதிவாளர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்கும் வாரியத்தில் உறுப்பினர் போன்ற அதிகாரங்கள் துணைவேந்தரிடம் உள்ளன.

நிறுவனர் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவர்தான் துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார். இதனால் நிறுவனரின் விருப்பத்தை நிறைவேற்றுபவராக துணைவேந்தர் இருக்கும் நிலை உள்ளது.

வாரிசு அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் வகிக்கக் கூடியதாக நிறுவனர் பதவி உள்ளது. சட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் தனிநபர் பரிந்துரைக்கும் துணைவேந்தரால் நிர்வகிக்கப்பட்டு வருவது சரியல்ல.

ஆள் குறைப்பு, ஊதியம் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சி 2012 நவம்பரில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உண்ணாவிரதம், வேலைநிறுத்தம், நுழைவு வாயில் கூட்டங்கள் போன்ற போராட்டங்களை நடத்தியது.

ஒவ்வோர் ஆண்டும் பல கோடி தொகுப்பு நிதியை அரசு வழங்கியும் பல்கலைக்கழகம் எப்போதும் இல்லாத அளவுக்கு நிதிச் சிக்கலை சந்தித்து வருகிறது. தேவைக்கு அதிகமாக ஊழியர்களை நியமித்தது, பல்கலைக்கழக நிதியை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியது ஆகியவையே இதற்கு காரணம்.

பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் பிற முறைகேடுகளை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க தனி தணிக்கை செய்யும் உள்ளாட்சி நிதிக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகள் அளிக்க ஓர் உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையானதாக இல்லை. எனவே, மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்ற சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com