Enable Javscript for better performance
இந்து என்றால் திருடன் என கருணாநிதி கூறியது பற்றி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி வழக்கு - Dinamani

சுடச்சுட

    

    இந்து என்றால் திருடன் என கருணாநிதி கூறியது பற்றி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி வழக்கு

    By dn  |   Published on : 20th April 2013 01:42 AM  |   அ+அ அ-   |    |  

    இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி.ஆர்.கெüதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப் பேசினார்.

    இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன்.

    எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆகவே, இந்த வழக்கு தொடர்பாக கருணாநிதியிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கெüதமன் கோரியுள்ளார்.

    இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp