கோவையில் கைதான கிச்சான் புகாரி கூட்டாளி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்

கோவையில் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரியின் கூட்டாளி முகமது அன்சாரி திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரியின் கூட்டாளி முகமது அன்சாரி திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலத்தில் நடந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை, வேலூரில் நடந்த இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் கொலை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் இந்த கொலைகள் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடி பொருள்கள், 142 எலெக்டரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக முகமது தாசிம், சாகுல் ஹமீது என்ற கட்ட சாகுல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிலால் உசேன் என்பரையும் போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூர் பா.ஜ.க. அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கிச்சான் புகாரிக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாம். இதையடுத்து முகமது தாசிமை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கிச்சான் புகாரிக்குச் சொந்தமான வெளிநாட்டு கைத்துப்பாக்கியை, கோவையைச் சேர்ந்த தனது கூட்டாளியான முகமது அன்சாரி (35) என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு டி.எஸ்.பி. ரவீந்திரன், ஆய்வாளர்கள் நாகராஜன், ராமகிருஷ்ணன், சிவகுமார், சீனிவாசன், சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கோவை சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது அன்சாரியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கியை உக்கடம் அருள்நகரில் உள்ள சாக்கடையில் வீசியதாகத் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் சாக்கடையை அடைத்துவிட்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 53 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி கூட்டாளி முகமது அன்சாரியை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வியாழக்கிழமை காலை திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நடுவர் ராமலிங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் ராமலிங்கம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முகமது அன்சாரி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com