பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சகோதரர்கள் கைது

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சகோதரர்கள் கைது

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழனி மலைக்கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை மதியம் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசி தகவலைத் தொடர்ந்து மலைக்கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. டிஐஜி வெற்றிச்செல்வன், எஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

தவிர, மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுக்க பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படாததால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து பழனிக்கோயிலில் கூடுதலாக வின்ச், ரோப்கார், படி வழிப்பாதைகளில் மொத்தம் நான்கு டோர்பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 20 போலீஸாரும் கூடுதலாக நியமிக்கப்பட்டு தைப்பூசம் திருவிழாக்காலம் வரை பணியிலிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை வைத்து எந்த செல்போனில் இருந்து பேசப்பட்டது என்றும், அந்த மர்ம நபர்கள் தற்போது எந்த எண்ணில் பேசி வருகின்றனர் என்றும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அந்த செல்போனுக்கு எந்த டவரில் இருந்து சிக்னல் வருகிறது என்று போலீஸார் கண்காணித்தனர். இதையடுத்து புதுஆயக்குடி மஞ்சணக்காரத் தெருவை சேர்ந்த முகமது அலி என்பவர் மகன்கள் பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

முகமது அலி அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட இவரது மகன்கள் பைசூல் மன்னாரும், சுலைமான் சேட்டும் 13 ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மிட்டாய் வியாபாரத்துக்காக சென்று அங்கேயே தங்கி விட்டனராம். கைது செய்யப்பட்ட இருவருக்கும் நிரந்தர முகவரி, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் கேரள மாநிலம் பாலக்காடு முகவரியிலேயே உள்ளது.

இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டனராம். இவர்களுக்கு ஏதும் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com