சுடச்சுட

  

  மொழி சிறுபான்மை மாணவர்களின் நிலை தொடர்பாக காங்கிரஸ் பேரவைத் தலைவர் கோபிநாத்துக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதிக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

  சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் பேரவைத் தலைவர் கோபிநாத் (ஓசூர்) பேசியது:

  தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. தெலுங்கு, உருது, கன்னடம் போன்று மொழிகள் வளர்வதற்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கலாம். தமிழகத்தில் மொழி சிறுபான்மை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது என்றார்.

  அப்போது குறுக்கிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறியது: கிருஷ்ணகிரியில் மட்டும் தெலுங்கு மொழியைப் பாடத்திட்டமாகக் கொண்ட பள்ளிக்கூடங்கள் மொத்தம் 254 உள்ளன.

  தமிழகத்தில் மொத்தம் 49,100 மொழிச் சிறுபான்மை மாணவர்கள் படித்து வருகின்றனர். மொழிச் சிறுபான்மையினருக்காக 10,460 தொடக்கப் பள்ளிகளும், 27,852 நடுநிலைப் பள்ளிகளும், 10,758 மேல்நிலைப் பள்ளிகளும் தமிழகத்தில் உள்ளன.

  கோபிநாத்: 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என்று உண்மைக்குப் புறம்பான தகவலை அமைச்சர் கூறுகிறார். ஒன்றாம் வகுப்பில் இருந்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலேயே படிக்கிறவர்கள், 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படிக்கும்போது தமிழ்த் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.

  என்.ஆர்.சிவபதி: உறுப்பினர் (கோபிநாத்) தவறான தகவலைத் தருகிறார். தமிழ் நன்றாகத் தெரிந்த ஆசிரியர்கள்தான் இந்தப் பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

  ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): தெலுங்கிலேயே படிக்கும் மாணவர்களுக்கு 10 வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போது, கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்படுகின்றன. அதைத்தான் உறுப்பினர் சொல்கிறார்.

  கோபிநாத்: மொழிச் சிறுபான்மை மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டன. இப்போது தமிழில் கேட்கப்படுகிறது. ஆனால் மொழிச் சிறுபான்மை மாணவர்கள் படிக்கும்போது ஒரு மொழியிலும் தேர்வு எழுதும்போது வேறு மொழியிலும் என்றால் அவர்கள் என்ன செய்வர். அதனால் அந்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இல்லாவிட்டால் ஆரம்பப் பள்ளியில் இருந்தே தமிழில் பாடம் நடத்துங்கள் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai