திமுக எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் சஸ்பெண்ட்

பேரவை துணைத் தலைவரை முற்றுகையிட முயன்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் சஸ்பெண்ட்

பேரவை துணைத் தலைவரை முற்றுகையிட முயன்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனால், திமுக எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது.

முன்னதாக, அவர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனித நேய மக்கள் கட்சியின் உறுப்பினர் எச்.எம்.ஜவாஹிருல்லா பேசினார். அப்போது, நடைபெற்ற காரசார விவாதம்:

ஜவாஹிருல்லா: இலங்கையில் இனப் பேரழிவுக்கு வித்திட்ட அந்த நாட்டின் அதிபர் ராஜபட்சவுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. இந்த சிவப்புக் கம்பளத்தை நாங்கள் இலங்கைத் தமிழர்களின் ரத்தமாக பார்க்கிறோம். ஆளுநர் உரையில் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டப் பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகள் கண்ணீரில் மிதக்கக் காரணம், மத்திய அரசுதான்.

இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளையே மத்திய அரசு மேற்கொள்கிறது. அந்த அரசை இங்குள்ள திமுக தாங்கிப் பிடிக்கிறது.

அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: திமுக ஆட்சிக் காலத்திலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். சில பேராசை பிடித்த மீனவர்கள்தான் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக அப்போது கருணாநிதி கருத்துத் தெரிவித்தார். மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு தனது கருத்தின் மூலம் நேரடியாகவே ஆதரவு தந்தார் கருணாநிதி.

இதற்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக): இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, அதன்பின் அதைக் கைவிட்டார். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்ததாகக் கூறி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். ஆனால், அதன் பிறகு இலங்கையில் 84 தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டனர். அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

அமைச்சர் கே.பி.முனுசாமி: வரலாறுகள் என்றும் அழிக்கப்படுவதில்லை. உங்களுடைய (திமுக) தலைவரின் மகள் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் விருந்து சாப்பிட்டு, பரிசுப் பொருளை பெற்றவர்தானே. இலங்கைத் தமிழர்கள் இன்று பாதிப்புக்குள்ளாகி, ஆதரவற்றவர்களானதற்கு காரணம் திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும்தான்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எம்.எல்.ஏ.க்கள் தங்கம் தென்னரசு, செங்குட்டுவன், டி.ஆர்.பி.ராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் முன் வரிசைக்கு வந்து, தங்கள் கட்சியின் விளக்கத்தை அளிக்க கட்சிக் கொறடா சக்கரபாணிக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திமுகவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சக்கரபாணி (திமுக): கடந்த 1983 முதல் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும் வருகிறோம். 1990-ம் ஆண்டில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆட்சியையே இழந்தோம். ஆனால், நீங்கள் (அதிமுக) பிரபாகரனை குற்றவாளி என அறிவிக்க வேண்டுமெனவும், போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் எனவும் கருத்துத் தெரிவித்தீர்கள். இந்தப் பிரச்னையில் நாடகம் ஆடுவது யார்?

அமைச்சர் கே.பி.முனுசாமி: என்றுமே நாங்கள் தீவிரவாதத்தை ஏற்றுக் கொண்டது இல்லை. இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், நீங்கள் (திமுக) எதிர்க்கட்சியாக இருந்தால் ஒருவிதமாகவும், ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால் மத்திய அரசுடன் இணைந்து அதற்கேற்றவாறும் நடந்து கொள்கிறீர்கள்.

இலங்கைக்கு பிரதிநிதிகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தபோது, அதை வேண்டாம் என நீங்கள் (திமுக) மறுக்கவில்லை. மாறாக, தனது மகளையே அனுப்புகிறேன் எனக் கூறி மூன்றாம் தர அரசியலை நடத்தியவர் கருணாநிதி.

அமைச்சர் முனுசாமியின் இந்தக் கருத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனை முற்றுகையிட முயன்றனர். அப்போது பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் முனுசாமியைப் பார்த்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் வார்த்தைகளைப் பேசினர். பதிலுக்கு அமைச்சர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதனால், பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றும்படி பேரவை துணைத் தலைவர் ஜெயராமன் உத்தரவிட்டார்.

பேரவைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் வந்திருந்தனர். அவர்கள் வெளியேற்றப்பட்டாலும், திடீரென பேரவை லாபியில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட முயன்றனர். லாபியில் அமர்ந்து பேரவைத் தலைவருக்கு எதிராக எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து, அவர்களை அங்கியிருந்தும் போலீஸார் வெளியேற்றினர்.

எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்: இதனிடையே, பேரவைத் தலைவர் பி.தனபால் ஓர் உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, பேரவை விதி 120-ன்படி, திமுக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதுபற்றி அவர் கூறியது:

திமுக எம்.எல்.ஏ.க்கள் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டனர். அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தினர். இந்தத் தொடரில் ஏற்கெனவே இரண்டு முறை வெளியேற்றப்பட்ட அவர்கள் இப்போது மூன்றாவது முறையாகவும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, கூட்டத் தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு பேரவைக்கு வரக்கூடாது எனத் தடை விதித்து உத்தரவிடுகிறேன் என்றார்.

சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையுடன் (பிப்ரவரி 8) நிறைவடைகிறது. இதனால் கடைசி நாளான வெள்ளிக்கிழமை திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வரமுடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com