சுடச்சுட

  

  நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

  By dn  |   Published on : 23rd February 2013 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  inag

  நெம்மேலியில் ரூ.871 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் நீரேற்று நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

  இதன் மூலம் திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

  காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரம் அருகே உள்ள நெம்மேலியில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

  இந்தத் திட்டத்துக்காக நாளொன்றுக்கு 26.5 கோடி லிட்டர் கடல் நீர் எடுக்கப்படுகிறது. அதில் 10 கோடி லிட்டர் நீரில் உப்புத்தன்மை நீக்கப்பட்டு, 4 நிலைகளாக சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது. மீதமுள்ள 16.5 கோடி லிட்டர் உப்பு நீர் மீண்டும் கடலுக்குள் மறுசுழற்சிக்காக விடப்படுகிறது.

  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கீழ்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு, நீரேற்று நிலையங்கள் மூலம் குழாய் வழியே பொது மக்கள் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நகரின் குடிநீர் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இது குறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் சிலர் கூறியது:

  நெம்மேலியில் தொடங்கப்பட்டுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் மூலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் அதிகரிக்கும். இந்த நிலையத்தில் சர்வதேச தொழில்நுட்ப முறைகளில் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது.

  கடலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 1600 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் மாற்று நிலையத்துக்கு நீர் எடுத்துவரப்படும்.

   

  4 நிலை சுத்திகரிப்பு: முதல் நிலையில் மேல்நோக்கி வடிகட்டி (அப் ஃப்ளோ ஃபில்டர்) மூலம் கடல் நீர் வடிகட்டப்படும். இரண்டாம் நிலையில் இஸ்ரேல் தொழில்நுட்பத்திலான தட்டு வடிகட்டி (டிஸ்க் ஃபில்டர்) மூலம் 100 மைக்ரானுக்கு மேல் உள்ள கசடுகள் வடிகட்டப்படும். மூன்றாம் நிலையில் நெதர்லாந்து தொழில்நுட்பத்திலான அல்ட்ரா ஃபில்டர்கள் மூலம் 0.1 மைக்ரான் வரையிலான கசடுகள் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படும்.

  இறுதியாக ஜப்பான் தொழில்நுட்பத்திலான ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றம் செய்யப்படும். மீதமாகும் அதிக உப்புத்தன்மையுடைய நீர் கடலில் 650 மீட்டர் தொலைவில் மறுசுழற்சிக்காக மீண்டும் விடப்படும்.

  இதற்கான மின் செலவினங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கத் தொழில்நுட்பமான எனர்ஜி ரெகவரி இன்ஸ்ட்ருமென்டல் முறை பயன்படுத்தப்படுகிறது.

  1000 லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்குவதற்கான உற்பத்திச் செலவு ரூ.21 ஆகும். நாளொன்றுக்கு ரூ. 21 லட்சம் செலவில் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும். வரும் மார்ச் முதல் தென்சென்னை மக்களுக்கு நெம்மேலியிலிருந்து பெறப்படும் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது என்றனர்.

  கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்காக 64.37 கிலோ மீட்டருக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

  கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், வீராங்கல் ஓடை ஆகிய இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டு குடிநீர் செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

  திருவான்மியூர், நெம்மேலி, வேளச்சேரி, அக்கரை உள்ளிட்ட இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு, கீழ்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் மூலம் தற்போது 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

  குடிநீர் வாரியம் மூலம் சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு குழாய் வழியாக 74.5 கோடி லிட்டரும், லாரி மூலமாக 2.2 கோடி லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெம்மேலி திட்டத்தின் மூலம் மார்ச் முதல் 10 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகிக்கப்படும்.

  முன்னதாக நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் நீரேற்று நிலையங்களைத் தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா, நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

  இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

   

  மேலும் ஒரு நிலையம் அமைக்கத் திட்டம்

  மீஞ்சூர் மற்றும் நெம்மேலியைத் தொடர்ந்து புதிதாக மேலும் ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  நெம்மேலியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பட்டிபுலம் பகுதியில் 20 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கத் திட்டமிட்டு வருவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  20 கோடி லிட்டரிலிருந்து 40 கோடி லிட்டர் வரை கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திறன் கொண்ட நிலையமாக அமைக்கவும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நில அளவைப் பணிகள், திட்ட மதிப்பீட்டுப் பணிகள் மற்றும் ஆய்வுகளை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவனங்களின் உதவியோடு அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai