சுடச்சுட

  
  rameswaram

  பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் தரை தட்டி நின்ற சரக்கு கப்பல் ரயில் பாலத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோதியது. பாலத்தின் தூண் சேதமடைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

  ஒரு வாரத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என பாலத்தைப் பார்வையிட்ட தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி தெரிவித்தார்.

  பாலத்தின் சிறப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தையும் ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் பகுதியில் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

  கடலில் மணல், கல்லுடன் கூடிய பவளப் பாறைகள்மீது 40 அடி இடைவெளியில் 145 தூண்களுடன் 2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் கீழ் பகுதியில் கப்பல்கள் செல்ல வசதியாக, இப்பாலம் திறந்து, மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இப்பாலத்தின் தனிச் சிறப்பாகும். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஸ்கெர்ஜர் என்ற பொறியாளரால் கட்டி முடிக்கப்பட்டு 1914-ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. 1964இல் ஏற்பட்ட புயல் காரணமாக பாலம் சேதமடைந்தது. பின்னர் செப்பனிடப்பட்டது. அதன் பின்னர் 15-7-2006இல் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

  ரூ. 23 கோடி மதிப்பில் பாம்பன் ரயில் பாலம் அகல

  ரயில் பாதையாக மாற்றப்பட்டு

  கடந்த 12-8-2007 முதல்

  மீண்டும் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது.

  தரை தட்டிய கப்பல்: இந்நிலையில் ஆயில் ஏற்றி இறக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு மும்பையில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக கொல்கத்தாவிலிருந்து வந்த சரக்குக் கப்பல் ஒன்றும், அதை இழுத்துச் செல்லும் இழுவைக் கப்பல் ஒன்றும் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக செல்ல கடந்த 9ஆம் தேதி இரவு பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் வந்து நங்கூரமிட்டு நின்றன. பலத்த காற்று மற்றும் கடலின் சீற்றம் காரணமாக சரக்கு கப்பலின் நங்கூரம் உடைந்து கப்பல் நகர்ந்து பாம்பன் பாலம் அருகே வந்து தரை தட்டி நின்றது. தரை தட்டி நின்ற கப்பலை கடந்த 3 நாள்களாக 3 விசைப் படகுகள் மூலமாக இழுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

  பாலத்தின்மீது மோதியது: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கடலில் வீசிய பலத்த காற்றின் வேகம் காரணமாக கப்பல் நகர்ந்து சென்று பாம்பன் ரயில் பாலத்தின் 121ஆவது தூணில் மோதியது. இதனால் வடகிழக்காக இருந்த தூண் தென்கிழக்குப் பக்கமாக திரும்பியது. மேலும், தூணில் இருந்த ரயில் பாலமும் விரிவடைந்து சேதமானது.

  இதுபற்றி அறிந்ததும் இப்பாலம் வழியாகச் செல்லும் புவனேசுவர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து அதிக இழுவைத்திறன் கொண்ட 6 விசைப்படகுகள் மூலம் சரக்கு கப்பலை இழுக்கும் பணி தொடங்கியது.

  இதனால் கப்பல், பாலத்திலிருந்து சுமார் 20 அடி தொலைவில் மட்டுமே தள்ளி நிறுத்த முடிந்தது. அதற்கு மேல் கப்பலை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.

  மீட்புப் பணி: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடலின் நீர்மட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைந்ததால் 6 விசைப்படகுகளும் ஒன்று சேர்ந்து இழுத்து கப்பலை பாலத்திலிருந்து வெகு தொலைவுக்கு கொண்டு சென்றன.

  பாலத்தில் மோதி நின்ற சரக்கு கப்பலை மீட்கும் பணியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாம்பன் ரயில் பாலத்துக்கு அருகில் உள்ள இந்திரா காந்தி மேம்பாலத்திலிருந்து பார்த்தனர். தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி மற்றும் ரயில்வே அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.

  ஒரு வாரத்தில் ரயில் போக்குவரத்து: ரயில் பாலம் சேதம் குறித்து ஏ.கே. ரஸ்தோகி கூறியதாவது: பாலத்தில் மோதி நின்ற கப்பல் மீட்கப்பட்டுள்ளது. சேதமடைந்த ரயில் பாலத்தை தாற்காலிகமாக இரும்பு கிரில் மூலம் செப்பனிட்டு ஒருவாரத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்கி விடுவோம்.

  ரயில் போக்குவரத்தை தொடங்கும் முன்பாக சோதனை ரயில் விடப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின் ரயில்கள் இயக்கப்படும். ரயில் பாலத்தை பழுது நீக்கத் தேவையான அனைத்து உபகரணங்ளும் தயார் நிலையில் உள்ளன என்றார் ரஸ்தோகி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai