Enable Javscript for better performance
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.சதாசிவம்- Dinamani

சுடச்சுட

    
    judge

    தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 19-ஆம் தேதி பதவியேற்கிறார்.

    உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் ஜூலை 18-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து கபீருக்கு அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள பி.சதாசிவம் (64), ஜூலை 19-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    கடந்து வந்த பாதை: ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள கடப்பநல்லூர் கிராமத்தில் 27.4.1949 அன்று விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சதாசிவம். சிங்கம்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1973 ஜூலை மாதம் வழக்குரைஞராக தன்னைப் பதிவு செய்து கொண்ட அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். சிவில், கிரிமினல், கம்பெனி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான வழக்குகளிலும் அவர் ஆஜராகி வாதிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

    8.1.1996 அன்று சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 20.4.2007 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 21.8.2007 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் ஆனார். தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.

    தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள சதாசிவம், 2014 ஏப்ரல் 26-ஆம் தேதி வரை இந்தப் பதவியில் நீடிப்பார்.

    60 ஆண்டுகளுக்கு பிறகு...

    இதற்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பதஞ்சலி சாஸ்திரி 7.11.1951 முதல் 3.1.1954 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 2-ஆவது தலைமை நீதிபதியாக அவர் இருந்தார்.

    அதன் பின்னர் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார். இவர் 40-ஆவது தலைமை நீதிபதி ஆவார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai