Enable Javscript for better performance
தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு- Dinamani

சுடச்சுட

  
  jayalalitha

  இலங்கையில் தனி ஈழம் குறித்து அங்கு வாழும் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  மேலும், இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை இந்தியா நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேறியது. முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த இந்தத் தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக, சட்டப் பேரவையில் புதன்கிழமை (மார்ச் 27) கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கோவி. செழியன் (திமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கணேஷ்குமார் (பாமக), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) ஆகியோர் பேசினர்.

  இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கும் போது இந்தத் தீர்மானங்களை அவர் கொண்டு வந்தார். இது குறித்து அவர் ஆற்றிய உரை:-

  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்போரை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறேன். இந்திய அரசு இலங்கைத் தமிழர்களை அழிக்க ஆயுதங்கள், பயிற்சிகளை அளித்ததில் இருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன்.

  மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், அங்குள்ள தமிழர்கள் கண்ணியமாக வாழ வழி செய்யவும், அந்த நாட்டு அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும் வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகக் கூடிய நிலையிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  தொடர்ந்து நடவடிக்கை: இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தடுத்து நிறுத்தினேன். இந்தியாவில் எங்கும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என பிரதமரை வலியுறுத்தினேன்.

  இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டேன். இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்து, அந்தப் போட்டியை நடத்துவதையே தமிழகம் கைவிட்டது.

  மேலும், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

  மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை: இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினேன். ஆனால், வலுவான தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து, அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களித்தது. இந்த ஆண்டும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா என்னென்ன திருத்தங்களை அளிக்க வேண்டுமென பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.

  இது மட்டுமல்லாமல், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், இதையெல்லாம் திமுக அங்கம் வகித்த மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

  தீர்மானங்கள்: உணர்வுப்பூர்வமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், இலங்கை அரசு அந்த நாட்டிலுள்ள தமிழர்களைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது.

  தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழர்களின் உணர்வுகளுக்கு, தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வருதத்தை அளிக்கிறது.

  இந்தச் சூழ்நிலையில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் தீர்மானங்களை தமிழக அரசின் சார்பில் முன்மொழிகிறேன்.

  இலங்கை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்தவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய அரசை தமிழக சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  போராட்டத்தை கைவிட வேண்டுகோள்

  இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக போராடி வரும் மாணவ-மாணவியர் தங்களது அறப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இது குறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியது:-

  இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற, ஈவுஇரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல்களை, போர்க்குற்றங்களை, இனப் படுகொலையைக் கண்டித்து கல்லூரி மாணவ-மாணவியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  மாநிலம் முழுவதும் சுமார் 100-க்கும் அதிகமான கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

  மேலும், 210 இடங்களில் ஆர்ப்பாட்டம், 110 இடங்களில் ஊர்வலம், 68 இடங்களில் சாலை மறியல், 31 இடங்களில் ரயில் மறியல், 24 இடங்களில் உருவபொம்மை எரிப்பு ஆகிய போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இலங்கைப் பிரச்னையில் தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் மாணவ-மாணவியரின் போராட்டம் அமைந்துள்ளது.

  ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுதான் இந்தப் போராட்டம். அரசியலுக்கு சிறிதும் இடமளிக்காமல் இலங்கைத் தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, உன்னதமான குறிக்கோளுக்காக அறவழியில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் இலங்கைத் தமிழர் நலனுக்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.

   

  இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நமது கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது.

  இதை மனதில் வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழகத்தின் மாணவ-மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தை கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இந்த வேண்டுகோளுக்கு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai