கச்சத் தீவை மீட்க பேரவையில் தீர்மானம்
By dn | Published on : 04th May 2013 03:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கச்சத் தீவை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
முன்னதாக, பேரவையில் இருந்த அனைத்து எதிர்க்கட்சியினர், இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்தனர். திமுக, பாமக ஆகிய கட்சிகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், கச்சத் தீவை மீட்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். தீர்மான விவரம்:-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்தல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருவாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் (எதிர்க்கட்சி துணைத் தலைவர்), அ.சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்), ஏ.அஸ்லாம் பாட்சா (மனித நேய மக்கள் கட்சி), கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஆர்.சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் வழிமொழிந்து பேசினர்.
பின்னர், முதல்வர் ஜெயலலிதா வழங்கிய பதிலுரை:-
இலங்கை நாட்டுக்கு கச்சத் தீவை காவு கொடுக்கும் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு ஜூனில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே இந்தப் பிரச்னை குறித்து பேசப்பட்டு வந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் விரிவாக குறைந்தபட்சம் இரண்டு முறை பேசப்பட்டது எனத் தெரிவித்து இருக்கிறார்.
இதிலிருந்து, இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கச்சத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை இந்தியா, இலங்கை நாட்டுக்கு தாரை வார்க்கப் போகிறது என்பது நன்கு தெரியும்.
நான் எடுத்த நடவடிக்கைகள்: முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்றதும் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்தேன். கச்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் கடந்த 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி எனது அரசால் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கச்சத் தீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமரை நேரில் பலமுறை வலியுறுத்திக் கூறினேன். கடிதம் மூலமும் வற்புறுத்தி இருக்கிறேன்.
இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, கச்சத் தீவில் மீன்பிடிக்கும் உரிமையை இந்திய மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தயவில் மத்திய அரசு இருந்ததாலோ என்னவோ, எந்தவிதமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அதிமுக சார்பில் பெருவாரி வழக்கினை மேற்கோள் காட்டி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்
கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தேன்.
இந்த வழக்கில் மத்திய அரசுடன், தமிழக அரசையும் பிரதிவாதியாக சேர்த்து இருந்தேன். ஆனால், அப்போது கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு சார்பில் சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், 2011-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றதும் பேரவையில் தீர்மானத்தை இயற்றி தமிழக அரசின் வருவாய்த் துறையையும் வழக்கில் இணையச் செய்தேன். ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்துள்ளது. வழக்கு நடந்து வருகிறது.
தீவை மீட்க வேண்டும்: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ஏழு முறை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடைமைகள் இலங்கை கடற்படையினரால் நாசம் செய்யப்பட்டன.
இவர்களில் 30 மீனவர்கள் இன்னமும் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இது தவிர, 5 தமிழக மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், தமிழக மீனவர்களைக் காக் கச்சத் தீவை மீட்பதைத் தவிர வழியில்லை. மீனவர்களின் நலன் காக்கும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
இதன்பின், இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.