Enable Javscript for better performance
போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க முடியாது: சீமான்- Dinamani

சுடச்சுட

  
  seeman

  போராட்டங்களை, அடக்குமுறையால் ஒடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற இன எழுச்சிக் கருத்தரங்கில் பேசினார்.

  கடலூரில், நிபந்தனையை மீறியதாக அக்கட்சியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு காவல்துறை வெள்ளிக்கிழமை இரவு தடை விதித்தது. இதையடுத்து, இன எழுச்சிக் கருத்தரங்கம், கடலூரில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

  கருத்தரங்கில் சீமான் பேசியது: விதிமுறை மீறல் என்ற பெயரில், கடலூரில் பொதுக் கூட்டம் நடைபெறும் நாளில் அதிகாலை வேளையில் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடக்குமுறையாக கருதுகிறோம்.

  இன விடுதலைக்கான போராட்டங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை.

  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக நான் வாக்கு சேகரித்த மேடை பந்தல்களில் பிரபாகரன் படம் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, இப்போது பயன்படுத்தக் கூடாது என்கிறார்.

  தனித்தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், இந்த தீர்மானம் குறித்து பேச எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்.

  இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசி இருக்கிறேன். மேடைகள் அனைத்திலும் பிரபாகரன் படம் இருக்கும். அவ்வாறு பேசும்போது எங்காவது வன்முறை நிகழ்ந்ததா?

  ஜாதி, மதங்களை மறந்து தமிழர்கள் என்ற பொது எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை தொடங்கியுள்ளோம்.

  ஆனால் ஜாதி அரசியல் செய்யும் சிலர், எங்களின் முயற்சி வெற்றி அடைந்துவிட்டால், தாம் அரசியல் அனாதைகளாகிவிடுவோம் எனக் கருதி, இப்போது ஜாதிய மோதல்களை தூண்டி விடுகின்றனர்.

  மரக்காணம் கலவரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், என்னை மட்டும் சந்திக்கவில்லை. தமிழர்களுக்கென பொதுத் தலைமை உருவாவதை இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே இதுகாட்டுகிறது.

  தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுகவை எதிர்த்த நாங்கள், வரும் மக்களவைத் தேர்தலில் ஈழத்தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என்று பேசினார் சீமான்.

   

  திடீர் தடையால் பரபரப்பு

  நாம் தமிழர் கட்சி சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனையின்பேரில் அனுமதி வழங்கியது. பேரணி, பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மும்முரமாக செய்து வந்தனர். மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டன.

  பேனர்களில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படங்கள் இடம் பெற்றிருந்ததால் அவற்றை வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக போலீஸார் அகற்றினர். மேலும், நிபந்தனைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் மற்றும் பேரணிக்கு எஸ்.பி. ராதிகா திடீர் தடை விதித்தார்.

  இது குறித்த உத்தரவை, கடலூரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி கடல் தீபன் வீட்டில் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஒட்டினர். தடையை மீறி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு சீமான் உள்ளிட்டவர்கள் புறப்பட்டால் அவர்களை கைது செய்ய எஸ்.பி. ராதிகா தலைமையில் 2 ஏ.எஸ்.பி., 8 டி.எஸ்.பி., அதிரடி படை போலீஸார் உள்ளிட்ட 1,000 போலீஸார் மண்டபத்தைச் சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai