சுடச்சுட

  
  23paki

  இதய நோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதக் கல்வி ஆசிரியருக்கு, சென்னையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகரின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது.

  இதயத்தின் இரண்டு தமனிகளும் பாதிக்கப்பட்ட அந்த பாகிஸ்தான் ஆசிரியருக்கு சென்னை ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனையின் மருத்துவக் குழு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது.

  இது குறித்து அந்த மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் கூறியது:

  அரிய வகை இதய நோய்: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மௌலானா முகமது ஜுபேர் ஆஸ்மி. இவர் "டைலேட்டர் கார்டியோமயோபதி' எனும் அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டவர்.

  இதன் காரணமாக இவரது இதயத்தின் செயல்பாடுகள் மிகவும் பலவீனமாக இருந்ததால் பாகிஸ்தான் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சையளிக்கத் தயங்கின.

  இதையடுத்து உயர் சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் லாகூரிலிருந்து அவர் சென்னை வந்தார்.

  அவரைப் பரிசோதித்ததில் நோயாளியின் உடல் உறுப்புகள் அனைத்தும் பலவீனமாக இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது கல்லீரல், சிறுநீரகங்களின் செயல்பாடுகள் குறைந்திருந்தன.

  இதைத் தவிர அவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் இருந்தது. நோயாளியின் ரத்த வகை மிகவும் அரிதான ஏபி பாஸிட்டிவ் ஆகும். எனவே அவருக்கு சிகிச்சையளிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது.

  கோயில் அர்ச்சகரின் இதயம்: கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 37 வயதான கோயில் அர்ச்சகருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. இதையடுத்து அர்ச்சகரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர்.

  மூளைச் சாவு ஏற்பட்டவரின் இதயத்தின் செயல்பாடுகள் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நோயாளிக்கு அர்ச்சகரின் இதயத்தை மாற்றியமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

  இருவரது ரத்த வகையும் வேறுபட்டு இருந்ததால் இதய மாற்று அறுவை சிகிச்சை சவாலானதாக விளங்கியது.

  சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் பாகிஸ்தான் ஆசிரியருக்கு வெற்றிகரமாக இந்திய அர்ச்சகரின் இதயம் பொருத்தப்பட்டது.

  தற்போது அவர் நலமாக உள்ளார். ஒரு சில வாரங்கள் மருத்துவக் கண்காணிப்புக்கு பிறகு அவர் பாகிஸ்தான் செல்ல உள்ளார் என்றார் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன்.

  இந்தச் சந்திப்பின்போது மருத்துவமனையின் மண்டல இயக்குநர் விஜயரத்னா, தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சுரேஷ்ராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

   

  இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் முகமது ஜுபேர் ஆஸ்மிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai