Enable Javscript for better performance
ரூ.1929 கோடியில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1929 கோடியில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்

    Published on : 30th May 2013 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dharamapuri

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.1,929 கோடி மதிப்பீட்டிலான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் (விடியோ கான்பரன்சிங்) இந்தத் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைக்க, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒகேனக்கல் குடிநீரைப் பிடித்து பயன்பெற்றனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவும், புளோரோசிஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,928.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    5 தொகுப்புகளாக நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்து, திட்டத்தின் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் க. பணீந்திரரெட்டி வரவேற்று திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினார்.

    இதைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா திட்டத்தைத் தொடக்கிவைக்க தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைகளில் இருந்த கல்வெட்டுகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, விழா மேடையருகே அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் இருந்து பெண்கள் ஒகேனக்கல் குடிநீரைப் பெற்றுச் சென்றனர்.

    தருமபுரியில் அம்பேத்கர் காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைவிடத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் அருகேயுள்ள தின்னூர் சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைவிடத்திலும் காணொலிக் காட்சி மூலம் திறப்பு விழா நிகழ்வுகளை இரு மாவட்ட மக்களும் பார்த்தனர்.

    33 லட்சம் மக்கள் பயனடைவர்: இந்தத் திட்டம் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 33.87 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai