வெற்றிகரமாக செயல்படுகிறது மங்கள்யான் விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செயல்படுவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெற்றிகரமாக செயல்படுகிறது மங்கள்யான் விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செயல்படுவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை நிலவரப்படி, விண்கலம் பூமிக்கு அருகில் 256 கிலோமீட்டரும், தொலைவில் 28,691 கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

மொத்தம் 43 நிமிஷங்கள் பயணத்துக்குப் பிறகு பூமிக்கு அருகில் 246 கிலோமீட்டர் மற்றும் தொலைவில் 23,566 கிலோமீட்டர் கொண்ட நீள்வட்டப் பாதையில் இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

விண்கலம் நிலைநிறுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே சூரிய ஒளி மின் தகடுகள் திறந்து செயல்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில் புதன்கிழமை காலை பூமியிலிருந்து அனுப்பப்பட்ட கட்டளைகளை மங்கள்யான் விண்கலம் ஏற்று வெற்றிகரமாக நிறைவேற்றியதாக சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் தொலைதூரப் பணிகள் இயக்குநர் எம்.எஸ்.பன்னீர்செல்வம் கூறினார்.

புதன்கிழமை காலை 7.15 மணிக்கு விண்கலத்துக்கு முன்னே செல்லவும், பிறகு திரும்பி வரவும், உயரத்தை சற்று அதிகரிக்கவும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இந்தக் கட்டளைகளை விண்கலம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

மேலும் அங்கிருந்து பூமியில் உள்ள தொலைத்தொடர்பு மையங்களுக்கு முறையான சிக்னல்களையும் அனுப்புகிறது.

நள்ளிரவில் பாதையின் தொலைவு அதிகரிப்பு: வியாழக்கிழமை (நவ.7) அதிகாலை 1.15 மணிக்கு விண்கலத்தின் பாதையை அதிகரிப்பதற்காக அதில் உள்ள திரவ எரிபொருள் இயக்கப்பட உள்ளது. 59 கிலோ எரிபொருள் கொண்ட இந்த எரிபொருள் 416 விநாடிகள் எரியும்.

அதன்பிறகு, விண்கலத்தின் நீள்வட்டப்பாதை 24 ஆயிரம் கிலோமீட்டரிலிருந்து 40 ஆயிரம் கிலோமீட்டர்களாக அதிகாரிக்கும் என பன்னீர்செல்வம் கூறினார்.

செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்வதற்காக இந்த நீள்வட்டப் பாதையின் தொலைவு டிசம்பர் 1-ம் தேதிக்குள் 2 லட்சம் கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு

செவ்வாய் கிரகத்தை நோக்கி, மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இந்தியாவுக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

அந்நாட்டிலிருந்து வெளியாகும் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை, செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கட்டுரையில், ""இந்தியாவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால், அது விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்துள்ள மாபெரும் வளர்ச்சியைக் குறிப்பதாக அமையும். கிரகங்கள் ஆராய்ச்சியில், மற்ற ஆசிய நாடுகளான ஜப்பானையும், சீனாவையும் இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும்'' என்று தெரிவித்துள்ளது.

சி.என்.என். தொலைக்காட்சி, ""இந்தியாவின் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரத்தை அடையும்போது, இந்த சாதனையைப் புரிந்த ஒரே ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா அடையும். இந்த முயற்சியின் மூலம், இத்துறையில் தனக்குப் போட்டியாக உள்ள சீனாவை இந்தியா மறைமுகமாக வீழ்த்தியுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

என்.பி.ஆர். வானொலியில், ரைஸ் விண்வெளி கல்விக்கழகத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் கூறுகையில், ""ஒருவேளை செவ்வாய் கிரகத்தை அடையும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் தோல்வியடைந்தால் கூட அதிலிருந்து அவர்கள் பல விவரங்களைக் கற்றுக்கொள்வார்கள்'' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com