
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நன்னடத்தை விதிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் அறிவித்தார்.
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சேலத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை நடத்தினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், மாநகராட்சி ஆணையர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் பேசியது: இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, ஏற்காடு தொகுதி மட்டுமன்றி சேலம் மாவட்டம் முழுவதிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
எனவே, அரசு அதிகாரிகள் தேர்தல் நன்னடத்தை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரையிலும் நலத் திட்ட உதவிகளை வழங்கக் கூடாது. பொதுமக்கள் விழாக்கள் அரசியல் கலக்காமல் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்தக் கூடாது.
வாரம்தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக திங்கள்கிழமைகளில் மனுக்களைப் போடுவதற்கான ஒரு பெட்டி வைக்கப்படும். அதில், பெறப்படும் மனுக்கள் தேர்தலுக்குப் பிறகு எடுக்கப்பட்டு குறைகள் தீர்க்கப்படும். உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட கார்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளனவா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் படங்களை மறைக்க வேண்டும். அல்லது எடுத்துவிட வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலகங்கள் பூட்டப்பட வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் அரசியல்வாதிகளை உட்கார வைத்துப் பேசக் கூடாது. புதிய நலத் திட்டங்களைத் தொடங்கவோ, செயல்படுத்தவோ கூடாது.
தங்களது ஊர்களுக்கு வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை அதிகாரிகள் யாரும் வரவேற்கச் செல்லக் கூடாது. அரசியல்வாதிகளுடன் அதிகாரிகளுக்கு எந்தவிதத் தொடர்பும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகளின் கொடிகள், பதாகைகள், விளம்பரங்களை உடனடியாக மறைக்கும்படி, அழிக்கும்படி அறிவுறுத்த வேண்டும். விளம்பரங்கள் அகற்றப்படாவிட்டால், அதை அதிகாரிகள் அகற்றிவிட்டு அதற்கான செலவினத்தை வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும்.
எந்த அரசியல் கூட்டங்களும் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக் கூடாது. அரசின் நலத் திட்டங்களான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மடிக் கணினிகள் போன்றவை இருக்கும் அறைகளைப் பூட்டி சீல் வைக்க வேண்டும். மாவட்டம், தொகுதியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து வாகனச் சோதனை நடத்தப்பட வேண்டும்.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற வசதியை, ஏற்காடு இடைத்தேர்தலில் அமல்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப்படும் என்றார் ஆட்சியர்.