அனல் மின் நிலையங்களுக்கு போதிய நிலக்கரி இல்லாததாலேயே நாடு முழுவதும் மின் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய மின் துறை முன்னாள் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான 2 நாள் மாநாடு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இந்தியாவில் உள்ள பெரும்பாலான அனல் மின் நிலையங்களும் எரிவாயு மின் நிலையங்களும் உற்பத்தித் திறனை விட மிகக் குறைந்த அளவிலான மின்சாரத்தையே இப்போது உற்பத்தி செய்கின்றன. இதற்குக் காரணம் நிலக்கரி, எரிவாயு போன்ற எரிபொருள்களுக்கு பற்றாக்குறை இருப்பதுதான்.
எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் 20 சதவீத அளவுக்கும், அனல் மின் நிலையங்கள் 50 முதல் 60 சதவீத அளவுக்குமே மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. தேசிய அனல் மின் நிலையங்களில் வழக்கமாக 90 சதவீத அளவுக்கு மின் உற்பத்தி இருக்கும். ஆனால், இந்த அனல் மின் நிலையங்களிலும் இப்போது மொத்த மின் உற்பத்தித் திறனில் 60 முதல் 70 சதவீத அளவுக்கே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அடுத்ததாக, நாடு முழுவதும் மின பகிர்மான, மின் தொடரமைப்புகள் இணைக்கப்பட வேண்டியுள்ளது. தேசிய மின் தொடரமைப்பு முழுமையாக இணைக்கப்பட்டால், அதிக மின் உற்பத்தி நடைபெறும் பகுதிகளிலிருந்து மின் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லலாம்.
மின் விநியோகத்தில் மின் இழப்பைக் குறைப்பதற்காக டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பிகள் உள்ளிட்ட கருவிகளை மாற்றுவதற்காக ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. ஆனாலும், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்த மின் விநியோக அமைப்புகள் முழுமையாக மேம்படுத்தப்படவில்லை.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றைத் தனித்தனியே அணுக வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு எரிசக்தி மற்றும் நீர் ஆதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை உருவாக்கி வருகிறது.
மத்திய அரசிடம் ஏற்கெனவே மின் துறை வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டம் உள்ளது. அதை இப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி செயல்படுத்தினால் நிச்சயம் நாட்டின் மின் நிலைமை மேம்படும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் செயல்பட்ட நிறுவனங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவின் தலைவர் ரெனி வான் பெர்கல், குஜராத் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கே.யூ.மிஸ்ட்ரி, மாநாட்டின் தலைவர் பிரதீப் பார்கவா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.