இலங்கை சிறையிலிருந்து விடுதலையான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 24 பேர் வியாழக்கிழமை பிற்பகல் காரைக்கால் வந்து சேர்ந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 8 படகுகளில் மீனவர்கள் 24 பேர் கடந்த 18-ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை அதே நாளில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் 24 பேரும் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீனவர்களை வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான விஸ்வஸ்த் என்ற கப்பல் மூலம் காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு மீனவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
துறைமுகத்தில் மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையின் காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங், புதுக்கோட்டை, நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மோகன்குமார், சுப்புராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தார். மீனவர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அவர்களது ஊருக்கு புறப்பட்டனர். மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவிக்கவில்லை.