காற்றாலைகள் மூலம் இதுவரை இல்லாத அளவாக 4,201 மெகாவாட் மின்சாரம் புதன்கிழமை (ஜூன் 25) உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தி 13, 538 மெகாவாட் என்ற அளவுக்கு இருந்தது.
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மொத்த மின் பயன்பாடு 293 மில்லியன் யூனிட்டுகள் ஆகும். இதில் 89.5 மில்லியன் யூனிட்டுகள் காற்றாலைகள் மூலம் பெறப்பட்டவை என இந்திய காற்றாலை சங்கத்தின் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கூறினார்.
இதுவரை இல்லாத அளவாக மொத்த பயன்பாட்டில் ஏறத்தாழ 31 சதவீதம் காற்றாலைகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு காற்றாலை மின்சாரம் மொத்த மின் பயன்பாட்டில் 30 சதவீதம் வரை வந்தது. இப்போது அதையும் தாண்டி, மொத்த மின் பயன்பாட்டில் 31 சதவீதத்தை காற்றாலை மின்சாரம் எட்டியுள்ளது.
கேரளத்துக்கு மின்சாரம்? காற்றாலை மின்சாரம் மிக அதிகளவில் இருப்பதால் கேரள அரசு தமிழக அரசிடம் மின்சாரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இது குறித்து தமிழக அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
முன்னதாக, தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பதற்குத் தடை இருந்தது. கடந்த ஜூன் 1 முதல் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உபரி மின்சாரம் இருந்தால் கேரளத்துக்கு வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.