தமிழகத்துக்கு கிருஷ்ணா நீரை ஜூலை 1-ஆம் தேதி முதல் திறந்து விடுமாறு ஆந்திர அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டின் படி ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு ஆந்திரம் வழங்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் இதுவரை 5.8 டி.எம்.சிó தண்ணீர் தமிழகத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மே 31-ஆம் தேதி தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கிருஷ்ணா நீரை திறந்து விடுவது குறித்து தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆந்திர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாநில நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் ஆந்திரத்துக்கு சென்று ஜூலை 1-ஆம் தேதி முதல் தமிழகத்துத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கடிதம் அளித்துள்ளனர்.
இது குறித்து தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது. ஜூலை 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடக் கோருவது குறித்த கடிதம் ஆந்திர அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிப்பதாக அம்மாநில அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார் அவர்.