தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தகுதியற்றவர் என்று விமர்சிப்பதன் பின்னே வஞ்சகம் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்களவைத் தேர்தலில் திமுக ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதும், அதைக் கண்டு எதிரிகளை விட நம்மில் இருக்கும் ஒரு சில நண்பர்கள் என்போர் அதிக மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
மக்களவைத் தேர்தலோடு திமுகவின் வரலாறு முடிந்துவிட்டது என்பதைப் போலவும், அடுத்து திமுக எழவே எழாது என்ற நினைப்புடன் திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக அப்படி விமர்சிப்பவர்கள் என்னைத் தூக்கிப் பேசியும், திமுகவை உழைத்து வளர்த்த தளபதிகளை இழித்தும் பழித்தும் பேசுகின்றனர். இப்படிச் செய்வதிலிருந்தே தளபதிகளை திமுக தொண்டர்களிடமிருந்து பிரித்து விடலாம் என்று கனவு காண்கின்றனர்.
அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்வேன். எத்தனையோ வஞ்சகர்கள் திமுகவை வீழ்த்த எண்ணி வீசிய வலைகள் எல்லாம் அறுந்து தூள்தூளாகப் போய்விட்டன என்பதை இந்த நாடு உணரும்.
திமுகவை நேரடியாகத் தாக்குவதற்கு திராணி இல்லாத காரணத்தால் என்னை (கருணாநிதி) தூக்கிப் பேசியும், ஸ்டாலின் போன்றவர்களை இழித்தும் பேசுகின்றனர்.
கட்சியை நடத்துவதற்கே ஸ்டாலின் தகுதியற்றவர் என்பதுபோல விமர்சித்து கட்டுரை தீட்டுபவர்களின் கணக்கு ஒன்றுதான்.
தலைவரை (கருணாநிதியை) ஏற்கெனவே ஓரளவு வீழ்த்திவிட்டோம். அடுத்து ஸ்டாலினை வீழ்த்துவதற்கு இதுதான் தக்க தருணம் என்று நம்புகின்றனர் போலும். இதன் மூலம் திமுகவை அறவே புல் பூண்டுகளே இல்லாமல் அழித்துவிட முடியாதா என்று கனவு காண்கின்றனர். எனவே திமுகவினர் இந்த வஞ்சகத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.