தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் நிர்வாகி படுகொலை: தா. பாண்டியன் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் ராதாகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கழுகுமலை நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கொல்லப்பட்ட ராதாகிருஷ்ணன், கே. வேலாயுதபுரம் ஊராட்சித் தலைவராக பணியாற்றி மக்களின் முழு ஆதரவைப் பெற்றவர். கூட்டுறவு முறையில் தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்கி சாதித்துக் காட்டியவர்.
தனது வாழ்வின் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து, அவர்களுக்காகப் போராடியவர். குறிப்பாக அருந்ததிய மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் முக்கிய குற்றவாளிகள் சிலர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.